Publicidade

Salmos 10

1 யெகோவாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்?

துன்பம் நேரிடுகிற நேரங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்?

2 துன்மார்க்கன் தன்னுடைய பெருமையினால்

ஏழ்மையானவனை கொடூரமாகத் துன்பப்படுத்துகிறான்;

அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள்.

3 துன்மார்க்கன் தன்னுடைய உள்ளத்தின் ஆசையில் பெருமை பாராட்டுகிறான்,

பொருளை அபகரிக்கிறவன் யெகோவாவைச் சபித்து அசட்டைசெய்கிறான்.

4 துன்மார்க்கன் தன்னுடைய கர்வத்தினால் தேவனைத் தேடமாட்டான்;

அவனுடைய நினைவுகளெல்லாம் தேவன் இல்லை என்பதே.

5 அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள்;

உம்முடைய நியாயத்தீர்ப்புகள் அவன் பார்வைக்கு எட்டாமல் மிகவும் உயரமாக இருக்கின்றன;

தன்னுடைய எதிராளிகள் எல்லோர்மேலும் சீறுகிறான்.

6 நான் அசைக்கப்படுவதில்லை, தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லை

என்று தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.

7 அவன் வாய் சபிப்பினாலும், கபடத்தினாலும்,

கொடுமையினாலும், நிறைந்திருக்கிறது;

அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு.

8 கிராமங்களின் மறைவான இடங்களிலே மறைந்திருந்து,

மறைவான இடங்களிலே குற்றமற்றவனைக் கொல்லுகிறான்;

திக்கற்றவர்களைப் பிடிக்க அவனுடைய கண்கள் நோக்கிக்கொண்டிருக்கின்றன.

9 தன்னுடைய கெபியிலிருக்கிற சிங்கத்தைப்போல மறைவில் மறைந்திருக்கிறான்;

ஏழையைப் பிடிக்கப் மறைந்திருந்து, அவனைத் தன்னுடைய வலைக்குள் இழுத்துப் பிடித்துக்கொள்ளுகிறான்.

10 திக்கற்றவர்கள் தன்னுடைய பலவான்கள் கையில் விழும்படி அவன் பதுங்கிக் கிடக்கிறான்.

11 தேவன் அதை மறந்தார் என்று அவர் தம்முடைய முகத்தை மறைத்து,

எப்போதும் அதைக் காணமாட்டார் என்றும்;

தன்னுடைய இருதயத்திலே சொல்லிகொள்ளுகிறான்.

12 யெகோவாவே, எழுந்தருளும்;

தேவனே, உம்முடைய கையை உயர்த்தும்;

ஏழைகளை மறக்காமலிரும்.

13 துன்மார்க்கன் தேவனை அசட்டைசெய்து,

நீர் கேட்டு விசாரிப்பதில்லை;

என்று தன்னுடைய இருதயத்தில் ஏன் சொல்லிக்கொள்ளவேண்டும்?

14 அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும்,

துக்கத்தையும் கவனித்திருக்கிறீரே;

நீர் பதிலளிப்பீர்;

ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்;

திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே.

15 துன்மார்க்கனும் பொல்லாதவனுமாக இருக்கிறவனுடைய கையை முறித்துவிடும்;

அவனுடைய துன்மார்க்கம் காணாமற்போகும்வரை அதைத் தேடி விசாரியும்.

16 யெகோவா எல்லாக் காலங்களுக்கும் இராஜாவாக இருக்கிறார்;

அந்நியமக்கள் அவருடைய தேசத்திலிருந்து அழிந்து போவார்கள்.

17 யெகோவாவே, ஏழைகளுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்;

அவர்கள் இருதயத்தை உறுதிப்படுத்துவீர்.

18 மண்ணான மனிதன் இனிப் பலவந்தம்செய்யத் தொடராமல்,

தேவனே நீர் திக்கற்ற பிள்ளைகளுக்கும்

ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதிசெய்ய

உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளுவீர்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-16_18-40-07-