Publicidade

Salmos 77

எதுதூன் என்னும் இராகத்தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஆசாபின் பாடல்.

1 நான் தேவனை நோக்கி என்னுடைய சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன்,

என்னுடைய சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன்,

அவர் எனக்குச் செவிகொடுத்தார்.

2 என்னுடைய ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்;

இரவிலும் என்னுடைய கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது;

என்னுடைய ஆத்துமா ஆறுதலடையாமல்போனது.

3 நான் தேவனை நினைத்தபோது அலறினேன்;

நான் தியானிக்கும்போது என்னுடைய ஆவி சோர்ந்துபோனது. (சேலா)

4 நான் தூங்காதபடி என்னுடைய கண்ணிமைகளைப் பிடித்திருக்கிறீர்;

நான் பேசமுடியாதபடி கலக்கமடைகிறேன்.

5 ஆரம்பநாட்களையும், ஆரம்பகாலத்து வருடங்களையும் சிந்திக்கிறேன்.

6 இரவுநேரத்தில் என்னுடைய பாடலை நான் நினைத்து,

என்னுடைய இருதயத்தோடு பேசிக்கொள்ளுகிறேன்;

என் ஆவி ஆராய்ச்சிசெய்தது.

7 ஆண்டவர் நித்தியகாலமாகத் தள்ளிவிடுவாரோ?

இனி ஒருபோதும் தயை செய்யாமலிருப்பாரோ?

8 அவருடைய கிருபை முற்றிலும் அற்றுப்போனதோ?

வாக்குத்தத்தமானது தலைமுறை தலைமுறைக்கும் ஒழிந்துபோனதோ?

9 தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ?

கோபத்தினாலே தமது உருக்கமான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ? என்றேன். (சேலா)

10 அப்பொழுது நான்: இது என்னுடைய பலவீனம்;

ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருடங்களை நினைவுகூருவேன்.

11 யெகோவாவுடைய செயல்களை நினைவுகூருவேன்,

உம்முடைய ஆரம்பகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்;

12 உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து,

உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன்.

13 தேவனே, உமது வழி பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது;

நம்முடைய தேவனைப்போலப் பெரிய தேவன் யார்?

14 அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே;

மக்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கச்செய்தீர்.

15 யாக்கோபு யோசேப்பு என்பவர்களின் சந்ததியாகிய உம்முடைய மக்களை,

உமது வல்லமையினாலே மீட்டுக்கொண்டீர். (சேலா)

16 தண்ணீர்கள் உம்மைக் கண்டது; தேவனே,

தண்ணீர்கள் உம்மைக் கண்டு தத்தளித்தது;

ஆழங்களும் கலங்கினது.

17 மேகங்கள் தண்ணீர்களைப் பொழிந்தது;

ஆகாயமண்டலங்கள் முழக்கமிட்டது;

உம்முடைய அம்புகளும் தெறிப்புண்டு பறந்தது.

18 உம்முடைய குமுறலின் சத்தம் சுழல்காற்றில் முழங்கினது;

மின்னல்கள் உலகை பிரகாசிக்கச் செய்தது; பூமி குலுங்கி அதிர்ந்தது.

19 உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது;

உமது காலடிகள் தெரியப்படாமல்போனது.

20 மோசே ஆரோன் என்பவர்களின் கையால்,

உமது மக்களை ஒரு ஆட்டு மந்தையைப்போல வழிநடத்தினீர்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-16_06-50-08-