Publicidade

Salmos 36

இராகத் தலைவனுக்கு, யெகோவாவுடைய ஊழியனாகிய தாவீது கொடுத்த பாடல்.

1 துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்;

அவன் கண்களுக்குமுன்பு தெய்வபயம் இல்லை.

2 அவன், தன்னுடைய அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படும்வரை,

தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே வஞ்சகம் பேசுகிறான்.

3 அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது;

புத்தியாக நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் விட்டுவிட்டான்.

4 அவன் தன்னுடைய படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து,

நல்லது இல்லாத வழியிலே நிலைத்து,

பொல்லாப்பை வெறுக்காமலிருக்கிறான்.

5 யெகோவாவே, உமது கிருபை வானங்களில் தெரிகிறது;

உமது சத்தியம் மேகமண்டலங்கள்வரை எட்டுகிறது.

6 உமது நீதி மகத்தான மலைகள் போலவும்,

உமது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது;

யெகோவாவே, மனிதர்களையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.

7 தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது!

அதினால் மனிதர்கள் உமது இறக்கைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்.

8 உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்;

உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்.

9 வாழ்வின் ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது;

உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்.

10 உம்மை அறிந்தவர்கள்மேல் உமது கிருபையையும்,

செம்மையான இருதயமுள்ளவர்கள்மேல்

உமது நீதியையும் பாராட்டியருளும்.

11 பெருமைக்காரர்களின் கால் என்மேல் வராமலும்,

துன்மார்க்கர்களுடைய கை என்னைப் பறக்கடிக்காமலும் இருப்பதாக.

12 அதோ அக்கிரமக்காரர்கள் விழுந்தார்கள்;

எழுந்திருக்கமுடியாமல் தள்ளப்பட்டுபோனார்கள்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-16_18-40-07-