Publicidade

Salmos 5

புல்லாங்குழலில் வாசிக்க இசைக்குழுவின் தலைவனிடம் அளிக்கப்பட்ட தாவீதின் பாடல்.

1 யெகோவாவே, என்னுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடும்,

என்னுடைய தியானத்தைக் கவனியும்.

2 நான் உம்மையே நோக்கி விண்ணப்பம் செய்கிறேன்;

என் இராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்.

3 யெகோவாவே, காலையிலே என்னுடைய சத்தத்தைக் கேட்டருளுவீர்;

காலையிலே உமக்கு நேராக வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்.

4 நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல;

தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை.

5 வீம்புக்காரர்கள் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்;

அக்கிரமக்காரர்கள் யாவரையும் வெறுக்கிறீர்.

6 பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்;

கொலை வெறியர்களையும்

வஞ்சகமான மனிதனையும் யெகோவா அருவருக்கிறார்.

7 நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்திற்குள் நுழைந்து,

உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன்.

8 யெகோவாவே, என்னுடைய எதிரிகளுக்காக என்னை உம்முடைய நீதியிலே நடத்தி,

எனக்கு முன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும்.

9 அவர்கள் வாயில் உண்மை இல்லை,

அவர்கள் உள்ளம் கேடுபாடுள்ளது;

அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட கல்லறையாகும்;

தங்களுடைய நாவினால் வஞ்சகம் பேசுகிறார்கள்.

10 தேவனே, அவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்த்திடும்;

அவர்கள் தங்களுடைய ஆலோசனைகளாலேயே விழும்படி செய்திடும்;

அவர்கள் துரோகங்களினுடைய தீவினைக்காக அவர்களைத் தள்ளிவிடும்;

உமக்கு விரோதமாகக் கலகம்செய்தார்களே.

11 உம்மில் அடைக்கலம் நாடிவருவோர்கள் அனைவரும் மகிழ்ந்து,

எந்நாளும் கெம்பீரிப்பார்களாக;

நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்;

உம்முடைய பெயரை நேசிக்கிறவர்கள் உம்மில் சந்தோஷப்படுவார்களாக.

12 யெகோவாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து,

கருணை என்னும் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்து கொள்ளுவீர்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-16_18-40-07-