Publicidade

Salmos 69

சோஷனீம் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல்.

1 தேவனே, என்னைக் காப்பாற்றும்;

வெள்ளங்கள் என்னுடைய ஆத்துமாவரை பெருகிவருகிறது.

2 ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன், நிற்க நிலையில்லை,

ஆழமான தண்ணீரில் இருக்கிறேன்; வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது.

3 நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்;

என்னுடைய தொண்டை வறண்டுபோனது;

என் தேவனுக்கு நான் காத்திருக்கும்போது,

என்னுடைய கண்கள் பூத்துப்போனது.

4 காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னுடைய தலைமுடியிலும் அதிகமாக இருக்கிறார்கள்;

வீணாக எனக்கு எதிரிகளாகி என்னை அழிக்கவேண்டும் என்றிருக்கிறவர்கள் பலத்திருக்கிறார்கள்;

நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடுக்கவேண்டியதானது.

5 தேவனே, நீர் என்னுடைய புத்தியீனத்தை அறிந்திருக்கிறீர்;

என்னுடைய குற்றங்கள் உமக்கு மறைந்திருக்கவில்லை.

6 சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரே,

உமக்காகக் காத்திருக்கிறவர்கள் என்னால் வெட்கப்பட்டுப் போகாமலிருப்பார்களாக;

இஸ்ரவேலின் தேவனே, உம்மைத் தேடுகிறவர்கள் என்னிமித்தம் வெட்கமடையாதிருப்பார்களாக.

7 உமக்காக நிந்தையைச் சகித்தேன்;

அவமானம் என்னுடைய முகத்தை மூடினது.

8 என்னுடைய சகோதரர்களுக்கு வேற்று மனிதனும், என்னுடைய தாயின் பிள்ளைகளுக்கு அந்நியனுமானேன்.

9 உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் எனக்குள் பற்றியெரிந்தது;

உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது.

10 என்னுடைய ஆத்துமா வாடும்படி உபவாசித்து அழுதேன்;

அதுவும் எனக்கு நிந்தையாக முடிந்தது.

11 சணலாடையை என்னுடைய உடையாக்கினேன்;

அப்பொழுதும் அவர்களுக்குப் பழமொழியானேன்.

12 வாசலில் உட்கார்ந்திருக்கிறவர்கள் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள்;

மதுபானம் குடிக்கிறவர்களின் பாடலானேன்.

13 ஆனாலும் யெகோவாவே, உதவிக்காலத்திலே உம்மை நோக்கி விண்ணப்பம்செய்கிறேன்;

தேவனே, உமது மிகுந்த கிருபையினாலும் உமது இரட்சிப்பின் சத்தியத்தினாலும் எனக்குச் செவிகொடுத்தருளும்.

14 நான் அமிழ்ந்து போகாதபடிக்குச் சேற்றிலிருந்து என்னைத் தூக்கிவிடும்;

என்னைப் பகைக்கிறவர்களிடத்திலிருந்தும் ஆழமான தண்ணீர்களில் இருந்தும் நான் நீங்கும்படி செய்யும்.

15 வெள்ளங்கள் என்மேல் புரளாமலும், ஆழம் என்னை விழுங்காமலும்,

பாதாளம் என்மேல் தன்னுடைய வாயை அடைத்துக்கொள்ளாமலும் இருப்பதாக.

16 யெகோவாவே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டருளும்,

உம்முடைய தயை நலமாயிருக்கிறது;

உமது உருக்கமான இரக்கங்களின்படி என்னைக் கண்ணோக்கியருளும்.

17 உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்;

நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாகச் செவிகொடுத்தருளும்.

18 நீர் என் ஆத்துமாவினிடத்தில் வந்து அதை விடுதலைசெய்யும்;

என்னுடைய எதிரிகளுக்காக என்னை மீட்டுவிடும்.

19 தேவனே நீர் என்னுடைய நிந்தையையும்

என்னுடைய வெட்கத்தையும் என்னுடைய அவமானத்தையும் அறிந்திருக்கிறீர்;

என்னுடைய எதிரிகள் எல்லோரும் உமக்கு முன்பாக இருக்கிறார்கள்.

20 நிந்தை என்னுடைய இருதயத்தைப் பிளந்தது;

நான் மிகவும் வேதனைப்படுகிறேன்;

எனக்காக பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன்,

ஒருவனும் இல்லை; தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தேன்,

ஒருவனும் இல்லை.

21 என்னுடைய ஆகாரத்தில் கசப்பு கலந்து கொடுத்தார்கள்,

என்னுடைய தாகத்திற்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள்.

22 அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும்,

அவர்களுடைய செல்வம் அவர்களுக்கு வலையுமாக இருக்கட்டும்.

23 அவர்களுடைய கண்கள் காணாதபடி இருளாகட்டும்;

அவர்கள் இடுப்புகளை எப்போதும் தள்ளாடச்செய்யும்.

24 உம்முடைய கடுங்கோபத்தை அவர்கள்மேல் ஊற்றும்;

உம்முடைய கோபாக்கினி அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக.

25 அவர்கள் குடியிருப்பு பாழாகட்டும்;

அவர்களுடைய கூடாரங்களில் குடியில்லாமற்போவதாக.

26 தேவனே நீர் அடித்தவனை அவர்கள் துன்பப்படுத்தி,

நீர் காயப்படுத்தினவர்களை நோகப் பேசுகிறார்களே.

27 அக்கிரமத்தின்மேல் அக்கிரமத்தை அவர்கள்மேல் சுமத்தும், அவர்கள் உமது நீதிக்கு வந்தெட்டாதிருப்பார்களாக.

28 ஜீவபுத்தகத்திலிருந்து அவர்கள் பெயர் கிறுக்கப்பட்டுப்போவதாக;

நீதிமான்கள் பெயரோடே அவர்கள் பெயர் எழுதப்படாதிருப்பதாக.

29 நானோ சிறுமையும் துயரமுமுள்ளவன்;

தேவனே, உம்முடைய இரட்சிப்பு எனக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.

30 தேவனுடைய பெயரைப் பாட்டினால் துதித்து,

அவரை நன்றி சொல்லி மகிமைப்படுத்துவேன்.

31 கொம்பும் விரிகுளம்புமுள்ள காளை எருதைவிட,

இதுவே யெகோவாவுக்குப் பிரியமாக இருக்கும்.

32 சாந்தகுணமுள்ளவர்கள் இதைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்;

தேவனைத் தேடுகிறவர்களே, உங்களுடைய இருதயம் வாழும்.

33 யெகோவா எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார்,

கட்டுண்ட தம்முடையவர்களை அவர் புறக்கணிக்கமாட்டார்.

34 வானமும் பூமியும் கடல்களும் அவைகளில் வாழ்கிற அனைத்தும் அவரைத் துதிக்கட்டும்.

35 தேவன் சீயோனைக் காப்பாற்றி, யூதாவின் பட்டணங்களைக் கட்டுவார்;

அப்பொழுது அங்கே குடியிருந்து அதை உரிமையாக்கிக்கொள்வார்கள்.

36 அவருடைய ஊழியக்காரரின் சந்ததியார் அதை உரிமையாக்கிக் கொள்வார்கள்;

அவருடைய பெயரை நேசிக்கிறவர்கள் அதில் குடியிருப்பார்கள்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-16_06-50-08-