Publicidade

Salmos 37

தாவீதின் பாடல்.

1 பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே;

நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே.

2 அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுக்கப்பட்டு,

பச்சைத்தாவரத்தைப்போல் வாடிப்போவார்கள்.

3 யெகோவாவை நம்பி நன்மைசெய்;

தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்.

4 யெகோவாவிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு;

அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.

5 உன் வழியைக் யெகோவாவுக்கு ஒப்புவித்து,

அவர்மேல் நம்பிக்கையாயிரு;

அவரே காரியத்தை வாய்க்கச்செய்வார்.

6 உன் நீதியை வெளிச்சத்தைப் போலவும்,

உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கச்செய்வார்.

7 யெகோவாவை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு;

காரியசித்தியுள்ளவன் மேலும்

தீவினைகளைச் செய்கிற மனிதன் மேலும் எரிச்சலாகாதே.

8 கோபத்தை தள்ளி, கடுங்கோபத்தை விட்டுவிடு;

பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்.

9 பொல்லாதவர்கள் அறுக்கப்பட்டுபோவார்கள்;

யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ

பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.

10 இன்னும் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இருக்கமாட்டான்;

அவன் நிலையை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை.

11 சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து,

மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.

12 துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாகத் தீங்கு நினைத்து,

அவன்மேல் பல்லைக் கடிக்கிறான்.

13 ஆண்டவர் அவனைப் பார்த்து நகைக்கிறார்;

அவனுடைய நாள் வருகிறதென்று காண்கிறார்.

14 சிறுமையும் எளிமையுமானவனை வீழ்த்தவும்,

செம்மை மார்க்கத்தாரை விழசெய்யவும்,

துன்மார்க்கர்கள் வாளை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள்.

15 ஆனாலும் அவர்கள் வாள் அவர்களுடைய இருதயத்திற்குள் உருவிப்போகும்;

அவர்கள் வில்லுகள் முறியும்.

16 அநேக துன்மார்க்கர்களுக்கு இருக்கிற திரளான செல்வத்தைவிட,

நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது.

17 துன்மார்க்கருடைய கரங்கள் முறியும்;

நீதிமான்களையோ யெகோவா தாங்குகிறார்.

18 உத்தமர்களின் நாட்களைக் யெகோவா அறிந்திருக்கிறார்;

அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும்.

19 அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து,

பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள்.

20 துன்மார்க்கர்களோ அழிந்துபோவார்கள்,

யெகோவாவுடைய எதிரிகள் ஆட்டுக்குட்டிகளின் கொழுப்பைப்போல

புகைந்து போவார்கள், அவர்கள் புகையாய்ப் புகைந்து போவார்கள்.

21 துன்மார்க்கன் கடன் வாங்கிச் செலுத்தாமற் போகிறான்;

நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான்.

22 அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்;

அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுக்கப்பட்டுபோவார்கள்.

23 நல்ல மனிதனுடைய நடைகள் யெகோவாவால் உறுதிப்படும்,

அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்.

24 அவன் விழுந்தாலும் தள்ளப்பட்டு போவதில்லை;

யெகோவா தமது கையினால் அவனைத் தாங்குகிறார்.

25 நான் இளைஞனாயிருந்தேன்,

முதிர்வயதுள்ளவனுமானேன்;

ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும்,

அவன் சந்ததி அப்பத்திற்கு பிச்சை எடுக்கிறதையும் நான் காணவில்லை.

26 அவன் எப்பொழுதும் இரங்கிக் கடன் கொடுக்கிறான்,

அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும்.

27 தீமையை விட்டு விலகி, நன்மை செய்;

என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய்.

28 யெகோவா நியாயத்தை விரும்புகிறவர்;

அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை;

அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்;

துன்மார்க்கர்களுடைய சந்ததியோ அறுக்கப்பட்டுபோகும்.

29 நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு,

என்றைக்கும் அதிலே குடியிருப்பார்கள்.

30 நீதிமானுடைய வாய் ஞானத்தை சொல்லி,

அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும்.

31 அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது;

அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை.

32 துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து,

அவனைக் கொல்ல வகைதேடுகிறான்.

33 யெகோவாவோ அவனை இவன் கையில் விடுவதில்லை;

அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது, அவனை தண்டனைக்குள்ளாகத் தீர்ப்பதுமில்லை.

34 நீ யெகோவாவுக்குக் காத்திருந்து,

அவருடைய வழியைக் கைக்கொள்;

அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்;

துன்மார்க்கர்கள் அறுக்கப்பட்டுபோவதை நீ காண்பாய்.

35 கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன்

அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான்.

36 ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்; பாருங்கள்,

அவன் இல்லை; நான் மறுபடியும் போனேன்,

அவன் காணப்படவில்லை.

37 நீ உத்தமனை நோக்கி,

செம்மையானவனைப் பார்த்திரு;

அந்த மனிதனுடைய முடிவு சமாதானம்.

38 அக்கிரமக்காரர் ஒன்றாக அழிக்கப்படுவார்கள்;

அறுக்கப்பட்டுபோவதே துன்மார்க்கர்களின் முடிவு.

39 நீதிமான்களுடைய இரட்சிப்பு யெகோவாவால் வரும்;

இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம்.

40 யெகோவா அவர்களுக்கு உதவிசெய்து,

அவர்களை விடுவிப்பார்;

அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால்,

அவர்களைத் துன்மார்க்கர்களுடைய கைக்குத் தப்புவித்து காப்பாற்றுவார்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-16_06-50-08-