Publicidade

Salmos 16

தாவீதின் மிக்தாம் என்னும் பாடல்.

1 தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன்.

2 என் நெஞ்சமே, நீ யெகோவாவை நோக்கி:

தேவனே நீர், என் ஆண்டவராக இருக்கிறீர்,

என்னுடைய செல்வம் உமக்கு வேண்டியதாக இல்லாமல்;

3 பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும்,

நான் என்னுடைய முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும்,

அது வேண்டியதாக இருக்கிறது என்று சொன்னாய்.

4 அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்;

அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன்,

அவர்களுடைய பெயர்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன்.

5 யெகோவா என்னுடைய சுதந்தரமும் என்னுடைய பாத்திரத்தின் பங்குமானவர்;

என்னுடைய சுதந்தரத்தை தேவனே நீர் காப்பாற்றுகிறீர்.

6 நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது;

ஆம், சிறப்பான பங்கு எனக்கு உண்டு.

7 எனக்கு ஆலோசனை தந்த யெகோவாவை துதிப்பேன்;

இரவுநேரங்களிலும் என்னுடைய உள்மனம் என்னை உணர்த்தும்.

8 யெகோவாவை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்;

அவர் என்னுடைய வலதுபக்கத்தில் இருக்கிறபடியால்

நான் அசைக்கப்படுவதில்லை.

9 ஆகையால் என்னுடைய இருதயம் பூரித்தது, என்னுடைய மகிமை சந்தோஷித்து;

என்னுடைய உடலும் நம்பிக்கையோடு தங்கியிருக்கும்.

10 என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர்;

உம்முடைய பரிசுத்தவான் அழிவைக் காண்பதில்லை.

11 வாழ்வின்வழியை எனக்குத் தெரியப்படுத்துவீர்;

உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும்,

உம்முடைய வலதுபக்கத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-16_18-40-07-