Publicidade

Salmos 61

நரம்புக் கருவிகளை இசைக்கும் இசைத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.

1 தேவனே, நான் கூப்பிடுகிறதைக் கேட்டு,

என்னுடைய விண்ணப்பத்தைக் கவனியும்.

2 என்னுடைய இருதயம் தளர்ந்துபோகும்போது

பூமியின் கடைசியிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்;

எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்.

3 நீர் எனக்கு அடைக்கலமும்,

எதிரிகளுக்கு எதிரே பெலத்த துருகமுமாக இருந்தீர்.

4 நான் உம்முடைய கூடாரத்தில் என்றென்றும் தங்குவேன்;

உமது இறக்கைகளின் மறைவிலே வந்து அடைவேன். (சேலா)

5 தேவனே, நீர் என்னுடைய பொருத்தனைகளைக் கேட்டீர்;

உமது பெயருக்குப் பயப்படுகிறவர்களின் சுதந்தரத்தை எனக்குத் தந்தீர்.

6 ராஜாவின் ஆயுசு நாட்களோடு நாட்களைக் கூட்டுவீர்;

அவர் வருடங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.

7 அவர் தேவனுக்கு முன்பாக என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்;

தயையும் உண்மையும் அவரைக் காக்கக் கட்டளையிடும்.

8 இப்படியே தினமும் என்னுடைய பொருத்தனைகளை நான் செலுத்தும்படியாக,

உமது பெயரை என்றைக்கும் புகழ்ந்து பாடுவேன்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_09-43-29-