Publicidade

Salmos 63

யூதாவின் பாலைவனத்தில் இருந்தபோது தாவீது பாடிய பாடல்.

1 தேவனே, நீர் என் தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்;

வறண்டதும் சோர்வுற்றதும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என்னுடைய ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது,

என்னுடைய உடலானது உம்மை வாஞ்சிக்கிறது.

2 இப்படியே பரிசுத்த இடத்தில் உம்மைப்பார்க்க ஆசையாக இருந்து,

உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன்.

3 உயிரைவிட உமது கிருபை நல்லது;

என்னுடைய உதடுகள் உம்மைத் துதிக்கும்.

4 என்னுடைய உயிர் உள்ளவரை நான் உம்மைத் துதித்து,

உமது பெயரை சொல்லிக் கையை உயர்த்துவேன்.

5 நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என்னுடைய ஆத்துமா திருப்தியாகும்;

என்னுடைய வாய் ஆனந்த சந்தோஷமுள்ள உதடுகளால் உம்மைப் போற்றும்.

6 என்னுடைய படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது,

இரவுநேரங்களில் உம்மைத் தியானிக்கிறேன்.

7 நீர் எனக்குத் துணையாக இருந்ததினால்,

உமது இறக்கைகளின் நிழலிலே சந்தோஷப்படுகிறேன்.

8 என்னுடைய ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது;

உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.

9 என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்களோ,

பூமியின் தாழ்விடங்களில் இறங்குவார்கள்.

10 அவர்கள் வாளால் விழுவார்கள்;

நரிகளுக்கு இரையாவார்கள்.

11 ராஜாவோ தேவனில் சந்தோஷப்படுவார்;

தேவன் பேரில் சத்தியம்செய்கிறவர்கள்

அனைவரும் மேன்மைபாராட்டுவார்கள்;

பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-15_21-32-39-