Publicidade

Salmos 39

எதுதூன் என்னும் தலைவனுக்கு தாவீதின் பாடல்.

1 என்னுடைய நாவினால் பாவம்செய்யாதபடிக்கு நான் என்னுடைய

வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்கும்வரை என்னுடைய வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன்.

2 நான் மவுனமாகி, ஊமையனாக இருந்தேன்,

நலமானதையும் பேசாமல் அமர்ந்திருந்தேன்;

ஆனாலும் என்னுடைய துக்கம் அதிகரித்தது;

3 என்னுடைய இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது;

நான் தியானிக்கும்போது நெருப்பு எரிந்தது;

அப்பொழுது என்னுடைய நாவினால் விண்ணப்பம் செய்தேன்.

4 யெகோவாவே, நான் எவ்வளவாக நிலையற்றவன் என்று உணரும்படி என்னுடைய முடிவையும்,

என்னுடைய நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும்.

5 இதோ, என்னுடைய நாட்களை நான்கு விரல் அளவாக்கினீர்;

என்னுடைய ஆயுள் உமது பார்வைக்கு ஒன்றும் இல்லாதது போலிருக்கிறது;

எந்த மனிதனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா)

6 நிழலைப்போலவே மனிதன் நடந்து திரிகிறான்;

வீணாகவே சஞ்சலப்படுகிறான்; சொத்தைச் சேர்க்கிறான்.

யார் அதை எடுத்துக்கொள்ளுவான் என்று அறியான்.

7 இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என்னுடைய நம்பிக்கை.

8 என்னுடைய மீறுதல்கள் எல்லாவற்றிலுமிருந்து என்னை விடுதலையாக்கும்,

மூடனின் அவமானப்படுத்துதலுக்கு என்னை ஒப்புக்கொடுக்க வேண்டாம்.

9 நீரே இதைச் செய்தீர் என்று நான்

என்னுடைய வாயைத் திறக்காமல் மவுனமாக இருந்தேன்.

10 என்னிலிருந்து உம்முடைய வாதையை எடுத்துப்போடும்;

உமது கையின் அடிகளால் நான் சோர்ந்து போனேன்.

11 அக்கிரமத்திற்காக நீர் மனிதனைக் கடிந்துகொண்டு தண்டிக்கிறபோது,

அவன் வடிவத்தைப் பூச்சி அரிப்பதுபோல அழியச்செய்கிறீர்;

நிச்சயமாக எந்த மனிதனும் மாயையே. (சேலா)

12 யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேட்டு,

என்னுடைய கூப்பிடுதலை காதுகொடுத்து கேளும்;

என்னுடைய கண்ணீருக்கு மவுனமாக இருக்கவேண்டாம்;

என்னுடைய முன்னோர்கள் எல்லோரையும்போல

நானும் உமக்குமுன்பாக அந்நியனும் நிலையற்றவனுமாக இருக்கிறேன்.

13 நான் இனி இல்லாமல்போவதற்குமுன்னே,

தேறுதலடையும்படி என்னிடத்தில் பொறுமையாக இரும்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-