Publicidade

Salmos 46

அலமோத் என்னும் கருவியில் வாசிக்கும்படி கொடுக்கப்பட்ட கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு, ஒரு பாடல்.

1 தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும்,

ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்.

2 ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுக்கடலில் சாய்ந்துபோனாலும்,

3 அதின் தண்ணீர்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் மலைகள் அதிர்ந்தாலும்,

நாம் பயப்படமாட்டோம். (சேலா)

4 ஒரு நதியுண்டு, அதின் நீரோடைகள் தேவனுடைய நகரத்தையும்,

உன்னதமான தேவன் தங்கும் பரிசுத்தஸ்தலத்தையும் சந்தோஷப்படுத்தும்.

5 தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது;

அதிகாலையிலே தேவன் அதற்கு உதவி செய்வார்.

6 தேசங்கள் கொந்தளித்தது, ராஜ்ஜியங்கள் தத்தளித்தது;

அவர் தமது சத்தத்தை முழங்கச்செய்தார், பூமி உருகிப்போனது.

7 சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்;

யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா)

8 பூமியிலே அழிவுகளை நடப்பிக்கிற யெகோவாவுடைய செய்கைகளை வந்துபாருங்கள்.

9 அவர் பூமியின் கடைசிவரை யுத்தங்களை ஓயச்செய்கிறார்;

வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்;

இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.

10 நீங்கள் யுத்தம் செய்யாமலிருந்து,

நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள் என்று தேவன் சொல்லுகிறார்;

தேசங்களுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.

11 சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்,

யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர் (சேலா).

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-16_18-40-07-