Publicidade

Salmos 108

தாவீது பாடிய பாடல்.

1 தேவனே, என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது;

நான் இன்னிசையால் புகழ்ந்து பாடுவேன்;

என்னுடைய மகிமையும் பாடும்.

2 வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்,

நான் அதிகாலையில் விழிப்பேன்.

3 யெகோவாவே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்;

தேசங்களுக்குள்ளே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.

4 உமது கிருபை வானங்களுக்கு மேலாகவும்,

உமது சத்தியம் மேகமண்டலங்கள் வரையிலும் எட்டுகிறது.

5 தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும்;

உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.

6 உமது பிரியர்கள் விடுவிக்கப்படுவதற்காக,

உமது வலதுகரத்தினால் இரட்சித்து,

எங்களுடைய ஜெபத்தைக் கேட்டருளும்.

7 தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு சொன்னார்,

ஆகையால் சந்தோஷப்படுவேன்;

சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்.

8 கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது;

எப்பிராயீம் என்னுடைய தலையின் பெலன்,

யூதா என்னுடைய செங்கோல்.

9 மோவாப் என்னுடைய பாதம் கழுவும் பாத்திரம்;

ஏதோமின்மேல் என்னுடைய காலணியை எறிவேன்;

பெலிஸ்தியாவின்மேல் ஆர்ப்பரிப்பேன்.

10 வலுவான நகரத்திற்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்?

ஏதோம்வரை எனக்கு வழிகாட்டுகிறவன் யார்?

11 எங்களுடைய சேனைகளோடு புறப்படாமலிருந்த தேவனே நீரல்லவோ?

எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவனே நீரல்லவோ?

12 இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்;

மனிதனுடைய உதவி வீண்.

13 தேவனாலே வெற்றி பெறுவோம்;

அவரே எங்களுடைய எதிரிகளை மிதித்துப்போடுவார்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-