Publicidade

Salmos 101

தாவீதின் சங்கீதம்.

1 யெகோவாவே, நான் உமது அன்பையும் நீதியையும் குறித்துப் பாடுவேன்;

உமக்கே நான் துதி பாடுவேன்.

2 நான் குற்றமற்ற வாழ்க்கையை வாழ கவனமாயிருப்பேன்;

நீர் எப்பொழுது என்னிடத்தில் வருவீர்?

நான் குற்றமற்ற இருதயத்துடன்

என் வீட்டின் விவகாரங்களை நடத்துவேன்.

3 தீங்கான செயல்களை

நான் என் கண்முன் வைக்கமாட்டேன்.

உண்மையற்ற மனிதரின் செயல்களை நான் வெறுக்கிறேன்;

அவைகள் என்னைப் பற்றிக்கொள்ளாது.

4 வஞ்சக இருதயமுடைய மனிதரை என்னைவிட்டுத் தூரமாய் விலக்கிவைப்பேன்;

நான் தீமையோடு எவ்வித தொடர்பும் வைக்கமாட்டேன்.

5 தன் அயலாரை இரகசியமாய் அவதூறு செய்கிற மனிதரை

நான் தண்டிப்பேன்;

கர்வமான கண்களையும் பெருமையான இருதயத்தையும் கொண்ட மனிதரை

நான் சகிக்கமாட்டேன்.

6 நாட்டில் உண்மையுள்ளவர்களாய் இருப்போர்மீது என் கண்கள் இருக்கும்,

அவர்கள் என்னோடு வாழ்வார்கள்;

குற்றமற்றவனாய் நடப்பவர்களே

எனக்கு ஊழியம் செய்வார்கள்.

7 வஞ்சனை செய்யும் யாரும்

என் வீட்டில் வாழமாட்டார்கள்;

பொய்ப் பேசுபவர் யாரும்

என் சமுகத்தில் நிற்கவுமாட்டார்கள்.

8 நான் நாட்டிலுள்ள கொடியவர்கள் எல்லோரையும்

காலைதோறும் தண்டிப்பேன்;

தீங்குசெய்யும் ஒவ்வொருவரையும்

யெகோவாவினுடைய நகரத்திலிருந்து அகற்றிவிடுவேன்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-