Publicidade

Salmos 28

தாவீதின் சங்கீதம்.

1 யெகோவாவே, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்;

நீர் என் கன்மலை,

எனக்கு செவிகொடாமல் இருக்கவேண்டாம்.

நீர் மவுனமாகவே இருப்பீரானால்,

நான் சவக்குழியில் கிடக்கிறவர்களைப் போலாவேன்.

2 நான் உதவிக்காக உம்மை நோக்கிக் கூப்பிடும்போது,

நான் உமது மகா பரிசுத்த இடத்திற்கு நேராக,

என் கைகளை உயர்த்தி

இரக்கத்துக்காக நான் கதறுவதைக் கேளும்.

3 கொடியவர்களுடனும்

தீமை செய்பவர்களுடனும் என்னை இழுத்துக்கொள்ளாதேயும்,

அவர்கள் அயலவருடன் நட்பாகப் பேசுகிறார்கள்;

ஆனால் அவர்களுடைய இருதயங்களிலோ தீங்கை வைத்திருக்கிறார்கள்.

4 அவர்களுடைய செயல்களுக்காகவும்

அவர்கள் செய்த தீமைகளுக்காகவும் அவர்களுக்குப் பதில் செய்யும்;

அவர்களுடைய கைகளின் செயலுக்காக அவர்களுக்குப் பதில்செய்து,

அவர்களுக்குத் தக்க தண்டனையை அவர்கள்மீது கொண்டுவாரும்.

5 யெகோவாவினுடைய செயல்களுக்கும்,

அவருடைய கரங்கள் செய்தவற்றுக்கும் அவர்கள் மதிப்புக் கொடாதபடியால்,

யெகோவா அவர்களை இடித்து வீழ்த்துவார்;

மீண்டும் அவர்களை ஒருபோதும் கட்டியெழுப்பமாட்டார்.

6 யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும்;

ஏனெனில் இரக்கத்துக்கான எனது கதறலை அவர் கேட்டிருக்கிறார்.

7 யெகோவாவே என் பெலனும் என் கேடயமுமாயிருக்கிறார்;

என் இருதயம் அவரில் நம்பியிருக்கிறது, அவர் எனக்கு உதவி செய்கிறார்.

என் இருதயம் மகிழ்ச்சியினால் துள்ளுகிறது;

நான் அவருக்குப் பாட்டினால் துதிகளைச் செலுத்துவேன்.

8 யெகோவா தமது மக்களின் பெலனானவர்;

தாம் அபிஷேகித்தவருக்கு இரட்சிப்பின் கோட்டையும் அவரே.

9 இறைவனே உமது மக்களைக் காப்பாற்றி,

உமது உரிமைச்சொத்தான அவர்களை ஆசீர்வதியும்;

அவர்களுடைய மேய்ப்பராயிருந்து அவர்களை என்றென்றும் தாங்கிக்கொள்ளும்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-