Publicidade

Salmos 130

சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.

1 யெகோவாவே, துயரத்தின் ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.

2 யெகோவாவே, என் குரலைக் கேளும்;

இரக்கத்திற்காக கூப்பிடும் எனது குரலை

உமது காதுகள் கவனமாய்க் கேட்கட்டும்.

3 யெகோவாவே, நீர் பாவங்களைப் பதிவுசெய்து வைத்திருப்பீரானால்,

யெகோவாவே, யார் உம்முன் நிற்கமுடியும்?

4 ஆனால், நாங்கள் பயபக்தியுடன் உங்களுக்கு சேவைசெய்ய

உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.

5 நான் யெகோவாவுக்காகக் காத்திருக்கிறேன், என் ஆத்துமா காத்திருக்கிறது;

அவருடைய வார்த்தையிலேயே என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறேன்.

6 விடியற்காலைக்காகக் காத்திருக்கும் காவற்காரரைப் பார்க்கிலும்,

ஆம், விடியற்காலைக்காகக் காத்திருக்கும் காவற்காரரைப் பார்க்கிலும்,

என் ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது.

7 இஸ்ரயேலே, உன் நம்பிக்கையை யெகோவாவிலேயே இருப்பதாக;

ஏனெனில் யெகோவாவிடத்தில் உடன்படிக்கையின் அன்பும்,

அவரிடத்தில் முழுமையான மீட்பும் உண்டு.

8 அவர்தாமே இஸ்ரயேலரை

அவர்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் மீட்பார்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-