Publicidade

Salmos 46

அலாமோத்தில் வாசிக்கக் கோராகின் மகன்களிலுள்ள பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட பாடல்.

1 இறைவன் நமக்கு புகலிடமும் பெலனுமாய் இருக்கிறார்,

ஆபத்துக் காலத்தில் நம்மோடிருந்து உதவுகிறவர் அவரே.

2 ஆகையால் பூமி பிளவுண்டு போனாலும்

மலைகள் கடலின் நடுவில் விழுந்தாலும்

3 கடலின் தண்ணீர் கொந்தளித்துப் பொங்கினாலும்

அதின் எழுச்சியால் மலைகள் அதிர்ந்தாலும் நாம் பயப்படமாட்டோம்.

4 ஒரு நதி உண்டு, அதின் நீரோடைகள் மகா உன்னதமானவர் வாசம்பண்ணும்

பரிசுத்த இடமான இறைவனின் நகரத்தை மகிழ்ச்சியாக்குகின்றன.

5 இறைவன் அதற்குள் இருக்கிறார், அது விழுந்து போகாது;

அதிகாலையில் இறைவன் அதற்கு உதவி செய்வார்.

6 நாடுகள் குமுறி எழுகின்றார்கள், அரசுகள் விழுகின்றன;

யெகோவா தன் குரலை எழுப்புகிறார், பூமி உருகுகிறது.

7 சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்;

யாக்கோபின் இறைவன் நமக்கு கோட்டையாய் இருக்கிறார்.

8 யெகோவாவினுடைய செயல்களையும்

அவர் பூமியின்மேல் கொண்டுவந்த அழிவுகளையும் வந்து பாருங்கள்.

9 யெகோவா பூமியின் கடைசிவரை

யுத்தங்களை நிறுத்துகிறார்;

அவர் வில்லை முறித்து, ஈட்டியை நொறுக்குகிறார்;

கேடயங்களை நெருப்பினால் எரிக்கிறார்.

10 யெகோவா சொல்கிறார், "நீங்கள் அமைதியாய் இருந்து

நானே இறைவன் என்று அறிந்துகொள்ளுங்கள்.

நான் நாடுகளுக்கு மத்தியில் புகழ்ந்து உயர்த்தப்படுவேன்,

நான் பூமியிலே புகழ்ந்து உயர்த்தப்படுவேன்."

11 சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்;

யாக்கோபின் இறைவன் நமக்கு கோட்டையாய் இருக்கிறார்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-