Publicidade

Salmos 104

1 என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி.

என் இறைவனாகிய யெகோவாவே, நீர் எவ்வளவு பெரியவர்;

மேன்மையையும், மகத்துவத்தையும் நீர் அணிந்திருக்கிறீர்.

2 யெகோவா ஆடையைப்போல ஒளியை அணிந்துள்ளார்;

அவர் வானங்களை ஒரு கூடாரத்தைப்போல் விரித்துள்ளார்.

3 அவர் தமது மேலறைகளை மழைமேகங்களின் மேலாக அமைக்கிறார்;

அவர் மேகங்களைத் தமது தேராக்கி,

காற்றின் சிறகுகள்மேல் செல்கிறார்.

4 அவர் காற்றுகளைத் தமது இறைத்தூதுவர்களாவும்,

நெருப்பு ஜூவாலைகளைத் தம்முடைய ஊழியர்களாகவும் ஆக்குகிறார்.

5 அவர் பூமியை அதின் அடித்தளங்கள்மீது அமைத்தார்;

அது ஒருபோதும் அசைக்கப்படாது.

6 உடையினால் மூடுவது போல் நீர் அதை ஆழ்கடலினால் மூடினீர்;

வெள்ளம் மலைகளுக்கு மேலாய் நின்றது.

7 ஆனாலும் உமது கண்டிப்பின்முன் வெள்ளம் விலகி ஓடியது;

உமது முழக்கத்தின் சத்தத்தைக் கேட்டு அது விரைந்து ஓடியது.

8 அவைகள் மலைகளுக்கு மேலாய் ஓடி,

பள்ளத்தாக்குகளில் இறங்கி,

நீர் அவைகளுக்கு ஏற்படுத்திய இடத்தில் நின்றன.

9 அவைகள் கடக்கமுடியாத ஓர் எல்லையை நீர் ஏற்படுத்தினீர்;

அவை இனி ஒருபோதும் பூமியை மூடிக்கொள்ளாது.

10 அவர் நீரூற்றுகளை பள்ளத்தாக்குகளுக்கு தண்ணீர் பாய்ச்சும்படி செய்கிறார்;

அது மலைகளுக்கிடையே ஓடுகின்றது.

11 அவை வெளியின் மிருகங்கள் அனைத்திற்கும் தண்ணீர் கொடுக்கின்றன;

காட்டுக் கழுதைகளும் அங்கே தங்களுடைய தாகத்தைத் தீர்த்துக்கொள்கின்றன.

12 ஆகாயத்துப் பறவைகள் நீர்நிலைகளின் அருகே கூடு கட்டுகின்றன;

கிளைகளின் மத்தியிலே அவை பாடுகின்றன.

13 அவர் தமது மேலறைகளிலிருந்து மலைகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறார்;

பூமி அவருடைய செய்கையின் பலனால் திருப்தியடைகிறது.

14 அவர் மந்தைகளுக்காகப் புல்லையும்,

மனிதன் பயிரிடும் தாவரங்களையும் வளரச்செய்கிறார்,

அவர் பூமியிலிருந்து அவர்களுக்கு உணவு கிடைக்கச் செய்கிறார்:

15 மனிதனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சை இரசத்தையும்,

அவனுக்கு முகக்களையை உண்டுபண்ணும் எண்ணெயையும்,

அவர்களைப் பெலப்படுத்தும் உணவையும் விளைவிக்கிறார்.

16 யெகோவாவினுடைய மரங்களுக்கு, அவர் நாட்டிய லெபனோனின் கேதுரு மரங்களுக்கு

நல்ல நீர்ப்பாய்ச்சலை கொடுக்கிறார்.

17 அங்கே பறவைகள் தம் கூடுகளைக் கட்டுகின்றன;

கொக்குகள் தேவதாரு மரங்களில் குடியிருக்கின்றன.

18 உயர்ந்த மலைகள் காட்டாடுகளுக்குச் சொந்தமாயும்,

செங்குத்தான பாறைகள் குழிமுயல்களுக்குப் புகலிடமாயும் இருக்கின்றன.

19 காலங்களைக் குறிக்க அவர் நிலவைப் படைத்தார்;

சூரியன் தான் எப்போது மறையவேண்டும் என்பதை அறியும்.

20 நீர் இருளைக் கொண்டுவருகிறீர், அப்பொழுது இரவாகின்றது;

காட்டு மிருகங்கள் எல்லாம் பதுங்கித் திரிகின்றன.

21 சிங்கங்கள் தங்கள் இரைக்காகக் கர்ஜிக்கின்றன;

இறைவனிடமிருந்து அவை தங்களுடைய உணவைத் தேடுகின்றன.

22 சூரியன் உதித்ததும் அவை ஒளிந்து ஓடுகின்றன;

அவை திரும்பிப்போய் தங்கள் குகைகளில் படுத்துக் கொள்கின்றன.

23 அப்பொழுது மனிதன் தன் வேலைக்குப் போகிறான்;

மாலையாகும்வரை தன் தொழிலில் ஈடுபடுகின்றான்.

24 யெகோவாவே, உமது செயல்கள் எண்ணற்றவை!

அவை அனைத்தையும் நீர் ஞானத்தில் படைத்திருக்கிறீர்;

பூமி நீர் படைத்த உயிரினங்களால் நிறைந்திருக்கின்றது.

25 அங்கே விரிந்து பரந்த கடல் உண்டு;

பெரிதும் சிறிதுமான எண்ணிலடங்கா

வாழும் உயிரினங்கள் அங்கே உண்டு.

26 அங்கே கப்பல்கள் இங்குமங்கும் போகின்றன;

நீர் உருவாக்கிய லிவியாதானும் அங்கே துள்ளி விளையாடும்.

27 நீர் அவைகளுக்கு உரிய நேரத்தில் உணவு கொடுப்பீர் என்று

அவைகளெல்லாம் உம்மையே பார்த்திருக்கின்றன.

28 நீர் அதை அவர்களுக்கு வழங்கும்போது,

அவை சேகரித்துக்கொள்கின்றன;

நீர் உமது கரத்தைத் திறக்கும்போது,

அவை நன்மைகளால் திருப்தியடைகின்றன.

29 நீர் உமது முகத்தை மறைக்கும்போது,

அவை திகைக்கின்றன;

நீர் அவைகளின் சுவாசத்தை எடுத்துவிட,

அவை இறந்து தூசிக்குத் திரும்புகின்றன.

30 நீர் உமது ஆவியை அனுப்புகையில்,

அவை படைக்கப்படுகின்றன;

நீர் பூமியின் மேற்பரப்பைப் புதுப்பிக்கிறீர்.

31 யெகோவாவின் மகிமை என்றென்றும் நிலைத்திருப்பதாக;

யெகோவா தமது செயல்களில் மகிழ்வாராக.

32 அவர் பூமியைப் பார்க்கும்போது அது நடுங்குகின்றது;

மலைகளைத் தொடும்போது அவை புகைகின்றன.

33 நான் என் வாழ்நாளெல்லாம் யெகோவாவைப் பாடுவேன்;

நான் உயிரோடிருக்குமட்டும் என் இறைவனுக்குத் துதி பாடுவேன்.

34 நான் யெகோவாவிடம் களிகூரும்பொழுது,

என் தியானமும் அவருக்கு மகிழ்ச்சியாய் இருப்பதாக.

35 ஆனால் பாவிகள் பூமியிலிருந்து இல்லாமல் போவார்களாக;

கொடியவர்கள் இனி இல்லாமல் போவார்கள்.

என் ஆத்துமாவே யெகோவாவைத் துதி.

அல்லேலூயா.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-22_10-02-25-