Publicidade

Salmos 75

"அழிக்காதே" என்ற இசையில் வாசிக்கும்படி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் சங்கீதம்.

1 இறைவனே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்;

உமது பெயர் சமீபமாயிருப்பதால் நாங்கள் நன்றி செலுத்துகிறோம்;

மனிதர் உமது அதிசயமான செயல்களைப்பற்றிக் கூறுகிறார்கள்.

2 இறைவனோ, "நியமிக்கப்பட்ட காலத்தை நான் தெரிந்துகொண்டு,

நீதியாய் நியாயந்தீர்பேன்.

3 பூமியும் அதிலுள்ள எல்லா மக்களுடன் கரைந்துபோகின்றது;

நான் அதின் தூண்களை உறுதியாய்ப் பிடித்துக்கொள்வேன்.

4 அகங்காரம் உள்ளவர்களைப் பார்த்து, ‘இனிமேல் பெருமை பேசாதிருங்கள்’ என்றும்,

கொடியவர்களைப் பார்த்து, ‘உங்கள் கொம்பை உயர்த்தாதிருங்கள்’ என்றும் சொல்கிறார்.

5 உங்கள் கொம்பை வானங்களுக்கு விரோதமாக உயர்த்தாதிருங்கள்;

தலைக்கனம் உடையவர்களாய்ப் பேசாதிருங்கள் என்றும் சொல்கிறார். "

6 கிழக்கிலிருந்தோ, மேற்கிலிருந்தோ,

அல்லது பாலைவனத்திலிருந்தோ உயர்வு வராது.

7 ஆனால் நியாயந்தீர்க்கிறவர் இறைவனே:

அவர் ஒருவனைத் தாழ்த்தி இன்னொருவனை உயர்த்துகிறார்.

8 யெகோவாவினுடைய கரத்தில் நியாயத்தீர்ப்பென்னும்

காரசாரமான நுரைக்கின்ற திராட்சை இரசம் நிறைந்த ஒரு கிண்ணம் இருக்கிறது;

அவர் அதை ஊற்றுகிறார்;

பூமியின் கொடியவர்கள் எல்லோரும் அதைக் கடைசிவரைக் குடிக்கிறார்கள்.

9 நானோ, இதை எக்காலத்திலும் அறிவிப்பேன்;

நான் யாக்கோபின் இறைவனுக்குத் துதி பாடுவேன்.

10 "கொடியவர்களின் கொம்பாகிய பலத்தை நான் வெட்டிப்போடுவேன்;

ஆனால் நீதிமான்களின் கொம்பாகிய பலத்தை மேலும் உயர்த்துவேன்"

என்று இறைவன் சொல்கிறார்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-