Publicidade

Salmos 56

பெலிஸ்தியர் தாவீதை காத் ஊரில் பிடித்தபோது, "தொலைவில் உள்ள கருவாலி மரத்தில் வாழும் மெளன மாடப்புறா" என்ற இசையில் தாவீது பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மிக்தாம் என்னும் தாவீதின் சங்கீதம்.

1 இறைவனே, என்மேல் இரக்கமாயிரும்,

மனிதன் என்னை தாக்குகிறான்;

நாள்தோறும் போர்செய்து என்னை அடக்குகிறான்.

2 என் பகைவர்கள் நாள்தோறும் என்னை அழுத்துகிறார்கள்;

அநேகர் தங்கள் பெருமையோடு என்னை எதிர்த்துப் போரிடுகிறார்கள்.

3 நான் பயப்படும் நாளில், உம்மை நம்புவேன்.

4 நான் இறைவனுடைய வார்த்தைகளைப் புகழ்வேன்;

அவரை நம்பியிருக்கிறேன், நான் பயப்படமாட்டேன்.

அழிவுக்குரிய மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்?

5 எப்பொழுதும் அவர்கள் என் வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்;

அவர்களின் திட்டங்கள் அனைத்தும் எனக்குத் தீமை செய்வதற்கே.

6 அவர்கள் ஒன்றுகூடி பதுங்கி இருக்கிறார்கள்,

என் உயிரைப் பறிக்க விருப்பம் உள்ளவர்களாய்

மறைந்திருந்து என் காலடிகளைக் கவனிக்கிறார்கள்.

7 அவர்கள் அக்கிரமங்களின் நிமித்தம் அவர்களைத் தப்பவிடாதேயும்;

இறைவனே, உமது கோபத்தில் மக்கள் கூட்டத்தைக் கீழே வீழ்த்திவிடும்.

8 நீர் என் அலைச்சலை கணக்கில் வைத்திருக்கிறீர்;

என் கண்ணீரை உமது தோற்குடுவையில் சேர்த்து வைத்திருக்கிறீர்;

அவை உமது பதிவேட்டில் இருக்கிறது அல்லவா?

9 நான் உம்மிடம் உதவிக்கேட்டு கூப்பிடும்போது,

என் பகைவர் புறமுதுகிட்டு ஓடுவார்கள்;

அதினால் இறைவன் என்னுடன் இருக்கிறார் என அறிந்துகொள்வேன்.

10 நான் இறைவனுடைய வார்த்தையைப் புகழ்வேன்;

யெகோவாவினுடைய வார்த்தையைப் புகழ்வேன்.

11 நான் இறைவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படமாட்டேன்;

மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்?

12 இறைவனே, நான் உமக்கு நேர்த்திக் கடன்களைச் செய்திருக்கிறேன்;

நன்றிக் காணிக்கைகளை நான் உமக்குச் செலுத்துவேன்.

13 ஏனெனில், நீர் என்னை மரணத்திலிருந்து மீட்டுக்கொண்டீர்,

என் கால்களை இடறாமல் காத்துக்கொண்டீர்;

இதினால் நான் இறைவனுக்கு முன்பாக

வாழ்வின் வெளிச்சத்தில் நடப்பேன்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-22_10-02-25-