Publicidade

Salmos 48

கோராகியரின் சங்கீதப் பாட்டு.

1 யெகோவா மிகவும் பெரியவர்,

நமது இறைவனுடைய நகரத்தில், அவருடைய பரிசுத்த மலையில்

அவர் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.

2 சீயோன் மலை தன் கம்பீரத்தில் அழகாய்,

முழு பூமியின் மகிழ்ச்சியாய் இருக்கிறது,

வடதிசையின் மிக உயர்ந்த மேடுகளைப் போல இருக்கிற அது

மகா அரசரின் நகரம்.

3 இறைவன் அதின் கோட்டைப் பட்டணங்களில் வீற்றிருந்து,

அவர்தாமே அதின் கோட்டை எனக் காண்பிக்கிறார்.

4 அரசர்கள் படைதிரட்டி ஒருமித்து

முன்னேறி வந்தபோது,

5 சீயோன் மலையைக் கண்டு அதிர்ச்சியடைந்து,

திகிலடைந்து தப்பி ஓடினார்கள்.

6 அங்கே நடுக்கம் அவர்களைப் பிடித்தது;

பிரசவிக்கும் பெண்ணுக்கு உண்டாகுவதைப் போன்ற வேதனை அவர்களைப் பிடித்தது.

7 யெகோவாவே, நீர் கிழக்குக் காற்றினால்,

தர்ஷீசின் கப்பல்களை உடைக்கிறீர்.

8 நாம் கேள்விப்பட்டது போலவே,

சேனைகளின் இறைவனுடைய பட்டணத்தில்,

நம்முடைய யெகோவாவின் பட்டணத்தில்

நாம் கண்டும் இருக்கிறோம்:

இறைவன் அந்தப் பட்டணத்திற்கு

என்றென்றைக்கும் பாதுகாப்பு கொடுக்கிறார்.

9 இறைவனே, உமது உடன்படிக்கையின் அன்பைக்குறித்து,

உமது ஆலயத்தில் நாங்கள் தியானிக்கிறோம்.

10 இறைவனே, உமது பெயரைப் போலவே

உமது துதியும் பூமியின் கடைசிவரை எட்டுகிறது;

உமது வலதுகரம் நீதியால் நிறைந்திருக்கிறது.

11 உமது நியாயத்தீர்ப்பின் நிமித்தம்

சீயோன் மலை களிகூருகிறது,

யூதாவின் கிராமங்கள் மகிழ்கிறது.

12 சீயோனைச் சுற்றி உலாவுங்கள்;

அதின் கோபுரங்களைக் கணக்கிடுங்கள்.

13 அவற்றைப்பற்றி அடுத்த தலைமுறைக்கு

நீங்கள் சொல்லும்படி,

அதின் காவல் அரண்களை நன்றாய் கவனியுங்கள்;

கோட்டைப் பட்டணங்களைப் பார்வையிடுங்கள்.

14 ஏனெனில் இந்த இறைவனே என்றென்றும் நம்முடைய இறைவன்;

மரணம் வரையும் அவரே நமக்கு வழிகாட்டியாய் இருப்பார்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-