Publicidade

Salmos 49

கோராகின் மகன்களிலுள்ள பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்.

1 மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேளுங்கள்,

இந்த உலகத்தில் வாழ்கிறவர்களே,

2 தாழ்ந்தோரே, உயர்ந்தோரே, செல்வந்தரே, ஏழைகளே,

எல்லோரும் ஒருமித்துச் செவிகொடுங்கள்:

3 என் வாய் ஞானமுள்ள வார்த்தைகளைப் பேசும்;

என் இருதயத்திலிருந்து வரும் தியானம் விளங்கிக்கொள்ளும் ஆற்றலைக் கொடுக்கும்.

4 நான் பழமொழிக்கு என் செவியைச் சாய்ப்பேன்;

விடுகதையை யாழ் இசைத்து விவரிப்பேன்:

5 தீங்கு நாட்கள் வரும்போதும்,

கொடிய ஏமாற்றுக்காருடைய அக்கிரமம் என்னைச் சூழ்ந்துகொள்ளும்போதும்

நான் ஏன் பயப்படவேண்டும்?

6 அவர்கள் தங்கள் செல்வத்தில் நம்பிக்கை வைத்து,

தங்கள் மிகுதியான உடைமைகளில் பெருமை பாராட்டுகிறார்கள்.

7 ஒருவனாலும் இன்னொருவனுடைய உயிரை மீட்கமுடியாது;

அவனுக்கான மீட்பின் பதிலீட்டை இறைவனுக்குக் கொடுக்கவும் முடியாது.

8 ஏனெனில் உயிருக்கான மீட்பின் பதிலீடு விலையுயர்ந்தது;

எந்த விலை கொடுத்தும் மீட்கமுடியாது.

9 அவர்கள் அழிவைக் காணாமல்

என்றென்றும் வாழும்படி எப்படிப்பட்ட விலையும் கொடுக்க முடியாது.

10 ஞானிகள் சாவதையும்,

மூடரும் புத்தியற்றவர்களும் அழிவதையும் எல்லோராலும் காணமுடியும்;

அவர்கள் தங்கள் செல்வத்தை மற்றவர்களுக்கு விட்டுச் செல்வதைக் காணலாம்.

11 தங்கள் பெயர்களையே அவர்கள் நிலங்களுக்கு வைத்தாலும்,

அவர்களுடைய கல்லறைகளே என்றென்றைக்கும் அவர்கள் வீடாகவும்

முடிவற்ற தலைமுறைகளுக்கு அவர்களுடைய தங்குமிடமாகவும் நிலைத்திருக்கும்.

12 ஆனாலும் மக்கள் நன்மதிப்பிலே நிலைத்திருக்கிறதில்லை;

அவர்கள் அழிந்துபோகும் மிருகங்களைப்போலவே இருக்கிறார்கள்.

13 தங்களிலேயே நம்பிக்கை வைக்கிறவர்களின் முடிவு இதுவே;

இவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுப் பின்பற்றுகிறவர்களின் நிலையும் அதுவே.

14 அவர்கள் செம்மறியாடுகளைப்போல சாவுக்கென்றே நியமிக்கப்பட்டுள்ளார்கள்;

மரணம் அவர்களின் மேய்ப்பனாயிருக்கும்.

நீதிமான்கள் காலையில் அவர்களை ஆளுகை செய்வார்கள்;

அவர்கள் அரண்மனையில் நிலைத்திராமல்,

கல்லறை அவர்களுடைய உருவத்தை அழித்துவிடும்.

15 ஆனால், இறைவனோ என் உயிரைப் பாதாளத்திலிருந்து மீட்டுக்கொள்வார்;

அவர் நிச்சயமாக என்னைத் தம்மிடத்தில் ஏற்றுக்கொள்வார்.

16 பிறர் செல்வந்தர்களாகி,

அவர்கள் வீட்டின் செழிப்பு அதிகரிக்கும்போது, திடுக்கிடாதே;

17 ஏனெனில் அவர்கள் சாகும்போது, தம்முடன் ஒன்றையும் கொண்டுபோகமாட்டார்கள்;

அவர்களுடைய செழிப்பும் அவர்களைப் பின்தொடராது.

18 அவர்கள் உயிரோடிருந்தபோது,

தங்களை ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று எண்ணினார்கள்.

அவர்கள் செழிப்படைந்து இருக்கும்போது மனிதர் அவர்களைப் புகழ்ந்தார்கள்.

19 ஆனால் அவர்கள் தங்களுடைய முன்னோர்களைப் போலவே மரிப்பார்கள்;

வாழ்வின் ஒளியை இனி ஒருபோதும் காணமாட்டார்கள்.

20 செல்வந்தராயிருந்தும் அறிவு இல்லாதிருந்தால்

அவர்கள் அழிந்துபோகும் மிருகத்தைப் போல் இருக்கிறார்கள்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-