Publicidade

Salmos 36

பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட யெகோவாவினுடைய ஊழியனாகிய தாவீதின் சங்கீதம்.

1 இறைவனிடமிருந்து என் உள்ளத்திற்கு வந்த செய்தி:

கொடியவர்களின் பாவம் அவர்களுடைய இருதயங்களில் நிலைத்திருக்கிறது;

அவர்களுடைய கண்களில்

இறைவனைப்பற்றிய பயம் இல்லை.

2 அவர்கள் பார்வையில் தங்களைப் பெருமையாக காணுவதால்,

அவர்கள் தங்களுடைய பாவத்தை உணர்வதும் இல்லை; அதை வெறுப்பதுமில்லை.

3 அவர்களுடைய வாயின் வார்த்தைகள் கொடுமையும் வஞ்சகமுமாய் இருக்கின்றன;

அவர்கள் ஞானமாய் நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் நிறுத்திவிட்டார்கள்.

4 அவர்கள் தனது படுக்கையிலும் தீமையைச் சிந்திக்கிறார்கள்;

பாவவழிக்கு அவர்கள் தங்களை ஒப்புவிக்கிறார்கள்;

தீமையானதை விடாதிருக்கிறார்கள்.

5 யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பு வானங்களையும்

உமது உண்மை மேகங்களையும் எட்டுகிறது.

6 உமது நீதி விசாலமான மலைகளைப் போன்றது,

உமது நியாயம் மகா ஆழத்தைப் போன்றது.

யெகோவாவே, நீரே மனிதனையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.

7 இறைவனே, உமது உடன்படிக்கையின் அன்பு எவ்வளவு அருமையானது!

மனிதர்கள் உமது சிறகின் நிழலிலே தஞ்சம் அடைகிறார்கள்.

8 உமது வீட்டின் செழிப்பினால் அவர்கள் நிறைவு பெருகிறார்கள்;

நீர் உமது மகிழ்ச்சியின் நதியிலிருந்து அவர்களுக்குக் குடிக்கக் கொடுக்கிறீர்.

9 ஏனெனில், வாழ்வின் ஊற்று உம்மிடத்திலேயே இருக்கிறது;

உமது ஒளியில் நாங்கள் வெளிச்சம் காண்கிறோம்.

10 உம்மை அறிந்தவர்களுக்கு உமது உடன்படிக்கையின் அன்பையும்

இருதயத்தில் நீதிமான்களுக்கு உமது நியாயத்தையும் வழங்கும்.

11 அகந்தை உள்ளவர்களின் கால் எனக்கு விரோதமாய் வராதிருப்பதாக;

கொடியவர்களின் கை என்னைத் துரத்தி விடாதிருப்பதாக.

12 தீமை செய்கிறவர்கள் எப்படி விழுந்து கிடக்கிறார்கள் என்று பாரும்!

அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி, வீசி எறியப்பட்டுக் கிடக்கிறார்கள்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-