Publicidade

Salmos 63

தாவீதின் சங்கீதம். யூதாவின் வனாந்திரத்திலிருக்கும்போது பாடியது.

1 இறைவனே, நீரே என் இறைவன்,

நான் ஆர்வத்துடன் உம்மைத் தேடுகிறேன்;

தண்ணீரில்லாமல் வறண்டதும்,

காய்ந்ததுமான நிலத்திலே

என் ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது,

என் உடலோ உமக்காக ஏங்குகிறது.

2 பரிசுத்த இடத்தில் நான் உம்மைக் கண்டேன்;

உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டறிந்தேன்.

3 உமது உடன்படிக்கையின் அன்பு உயிரைப் பார்க்கிலும் சிறந்தது;

ஆகையால் என் உதடுகள் உம்மை மகிமைப்படுத்தும்.

4 நான் உயிருடன் இருக்கும்வரை உம்மைத் துதிப்பேன்;

ஜெபத்தில் உமது பெயரைச் சொல்லி என் கைகளை உயர்த்துவேன்.

5 அறுசுவை உணவுகளால் திருப்தியடைவது போல, என் ஆத்துமா திருப்தியடையும்;

என் வாய் களிப்புள்ள உதடுகளினால் பாடி, உம்மைத் துதிக்கும்.

6 என் படுக்கையில் நான் உம்மை நினைக்கிறேன்;

இராக்காலங்களில் உம்மை தியானம் செய்கிறேன்.

7 நீரே என் உதவியாயிருப்பதால்,

உமது சிறகுகளின் நிழலிலே நான் மகிழ்ச்சியுடன் பாடுவேன்.

8 நான் உம்மை விடாமல் பற்றிக்கொண்டிருக்கிறேன்;

உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.

9 என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள்

பூமியின் ஆழங்களில் இறங்குவார்கள்.

10 அவர்கள் வாளுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்;

நரிகளுக்கு இரையாவார்கள்.

11 ஆனால் அரசன் இறைவனில் மகிழ்வான்;

இறைவனுடைய பெயரில் சத்தியம்பண்ணுகிற யாவரும் அவரில் மேன்மைபாராட்டுவார்கள்;

பொய்யர்களுடைய வாய்களோ மூடப்படும்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-