Publicidade

Salmos 52

தாவீது அகிமெலேக்கின் வீட்டிற்கு சென்றான் என்று ஏதோமியனாகிய தோவேக்கு வந்து சவுலுக்கு சொன்னபோது பாடிய மஸ்கீல் என்னும் சங்கீதம்.

1 பலவானே, ஏன் தீமையைப்பற்றி பெருமை பாராட்டுகிறாய்?

இறைவனுடைய உடன்படிக்கையின் அன்பு

எந்நாளும் உள்ளது.

2 வஞ்சகம் செய்கிறவனே,

உன் நாவு அழிவை ஏற்படுத்த சதி செய்கிறது;

அது தீட்டப்பட்ட சவரக்கத்தியைப் போலிருக்கிறது.

3 நீ நன்மையைப் பார்க்கிலும் தீமையையும்

உண்மை பேசுவதைவிட பொய்யையும் விரும்புகிறாய்.

4 வஞ்சக நாவே,

நீ அனைத்துத் தீங்கான வார்த்தைகளை விரும்புகிறாய்!

5 இறைவன் உன்னை நிச்சயமாகவே நித்திய அழிவுக்குள்ளாக்குவார்:

அவர் உன்னை உன் கூடாரத்திலிருந்து விலக்கி,

வாழ்வோரின் நாட்டிலிருந்து உன்னை வேரோடு எடுத்துப் போடுவார்.

6 இதைக்கண்டு நீதிமான்கள் பயப்படுவார்கள்;

அவர்கள் அவனைப் பார்த்து சிரித்து,

7 "இதோ பாருங்கள்,

இவன் இறைவனைத் தன் அரணாகக் கொள்ளாதவன்;

தன் மிகுந்த செல்வத்தில் நம்பிக்கை வைத்து,

தன்னுடைய அக்கிரமத்தில் பலத்துக்கொண்ட மனிதன்!" என்பார்கள்.

8 ஆனால் நானோ, செழித்து வளரும் ஒலிவமரத்தைப் போல்

இறைவனின் ஆலயத்தில் இருக்கிறேன்;

நான் இறைவனுடைய உடன்படிக்கையின் அன்பில்

எப்பொழுதும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

9 நீர் எனக்குச் செய்தவற்றிற்காக உமது பரிசுத்தவான்களுக்கு முன்பாக

நான் உம்மை என்றென்றும் துதிப்பேன்,

உம்முடைய பெயரில் நான் எதிர்பார்ப்பை வைப்பேன்;

இறைவனே உமது பெயர் நல்லது.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-