Publicidade

Salmos 57

தாவீது சவுலிடமிருந்து தப்பிக் குகைக்குள் ஒளிந்துகொண்டிருந்தபோது, "அழிக்காதே" என்ற இசையில் பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மிக்தாம் என்னும் தாவீதின் சங்கீதம்.

1 என்மேல் இரக்கமாயிரும், இறைவனே, என்மேல் இரக்கமாயிரும்,

என் ஆத்துமா உம்மிடத்தில் தஞ்சம் அடைகிறது.

பேரழிவு கடந்து செல்லுமளவும்,

நான் உமது சிறகுகளின் நிழலில் புகலிடம் கொள்வேன்.

2 எனக்காக யாவையும் செய்து முடிக்கும்,

மகா உன்னதமானவரான இறைவனை நோக்கி நான் கூப்பிடுவேன்.

3 அவர் பரலோகத்திலிருந்து உதவி அனுப்பி என்னைக் காப்பாற்றுவார்,

என்னைத் தாக்குகிறவர்களைக் கடிந்துகொள்வார்;

இறைவன் தமது உடன்படிக்கையின் அன்பையும் உண்மையையும் அனுப்புவார்.

4 நான் சிங்கங்களின் நடுவில் இருக்கிறேன்;

என்னை எதிர்க்கும் மனுமக்களின் மத்தியில் இருக்கிறேன்;

அவர்களுடைய பற்கள் ஈட்டிகளும் அம்புகளுமாய் இருக்கிறது;

அவர்களின் நாவுகளோ கூர்மையான வாள்கள்.

5 இறைவனே, வானங்களுக்கு மேலாகப் புகழ்ந்து உயர்த்தப்படுவீராக;

உமது மகிமை பூமியெங்கும் இருப்பதாக.

6 என் கால்களுக்கு அவர்கள் வலையை விரித்தார்கள்;

துயரத்தினால் நான் சோர்ந்து போனேன்.

அவர்கள் என் பாதையில் ஒரு குழியைத் தோண்டினார்கள்;

அதற்குள் அவர்களே விழுந்து போனார்கள்.

7 என் இருதயம் உறுதியாயிருக்கிறது,

இறைவனே, என் இருதயம் உறுதியாயிருக்கிறது;

நான் இசையமைத்துப் பாடுவேன்.

8 என் ஆத்துமாவே, விழித்தெழும்பு!

யாழே, வீணையே, விழித்தெழுங்கள்!

நான் அதிகாலையில் விழித்தெழுவேன்.

9 ஆண்டவரே, நாடுகள் மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்;

மக்கள் மத்தியில் நான் உம்மைப் பாடுவேன்.

10 ஏனெனில் உமது உடன்படிக்கையின் அன்பு பெரியது, அது வானங்களை எட்டுகிறது;

உமது சத்தியம் ஆகாயங்களை எட்டுகிறது.

11 இறைவனே, வானங்களுக்கு மேலாகப் புகழ்ந்து உயர்த்தப்படுவீராக;

உமது மகிமை பூமியெங்கும் இருப்பதாக.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-22_10-02-25-