Publicidade

Salmos 135

1 யெகோவாவைத் துதியுங்கள். மற்றும் 21

யெகோவாவினுடைய பெயரைத் துதியுங்கள்;

யெகோவாவின் பணியாட்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள்,

2 நமது இறைவனுடைய ஆலய முற்றங்களிலும்,

யெகோவாவினுடைய ஆலயத்திலும் ஊழியம் செய்கிறவர்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள்.

3 யெகோவாவைத் துதியுங்கள், யெகோவா நல்லவர்;

அவருடைய பெயருக்குத் துதி பாடுங்கள், அது இனிமையானது.

4 ஏனெனில் யெகோவா யாக்கோபைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்;

இஸ்ரயேலரைத் தமது அருமைச் சொத்தாய் இருக்கும்படி தெரிந்துகொண்டார்.

5 யெகோவா பெரியவர் என்றும்,

நமது யெகோவா எல்லாத் தெய்வங்களைப் பார்க்கிலும்,

மேலானவர் என்பதையும் நான் அறிவேன்.

6 வானத்திலும் பூமியிலும்,

கடல்களிலும், அவைகளின் எல்லா ஆழங்களிலும்

யெகோவா தமக்கு விருப்பமான எதையும் செய்கிறார்.

7 அவர் பூமியின் கடைசியிலிருந்து மேகங்களை எழும்பச் செய்கிறார்;

மழையுடன் மின்னலையும் அவர் அனுப்புகிறார்,

காற்றை தமது சேமிப்புக்கிடங்கிலிருந்து வெளியே புறப்படச்செய்கிறார்.

8 அவர் எகிப்தின் முதற்பேறுகளை அழித்தார்,

மனிதரின் முதற்பேறுகளையும் மிருகங்களின் தலையீற்றுகளையும் அழித்தார்.

9 எகிப்தே, பார்வோனுக்கும் அவனுடைய எல்லா பணியாட்களுக்கும் விரோதமாக

அவர் தம்முடைய அடையாளங்களையும் அதிசயங்களையும் உன் மத்தியில் அனுப்பினாரே.

10 அவர் அநேக நாடுகளைத் தாக்கினார்,

வலிமைமிக்க அரசர்களைக் கொன்றார்;

11 எமோரியரின் அரசன் சீகோனையும்,

பாசானின் அரசன் ஓகையும்,

கானானின் அரசர்கள் எல்லோரையும் அழித்தார்,

12 அவர் அவர்களுடைய நாட்டை உரிமைச்சொத்தாக,

தமது மக்களாகிய இஸ்ரயேலருக்கு உரிமைச்சொத்தாகக் கொடுத்தார்.

13 யெகோவாவே, உமது பெயர் என்றென்றைக்கும் நிலைக்கிறது;

யெகோவாவே, உமது புகழ் தலைமுறை தலைமுறையாக நிலைக்கும்.

14 யெகோவா தம் மக்களின் நியாயத்தை விசாரித்து,

தம் அடியார்கள்மேல் இரக்கங்காட்டுவார்.

15 பிறநாடுகளின் விக்கிரகங்கள் வெள்ளியும் தங்கமும்,

மனிதருடைய கைகளினால் செய்யப்பட்டதுமாய் இருக்கிறது.

16 அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது;

அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.

17 அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது,

அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை.

18 அவைகளைச் செய்கிறவர்களும்,

அவைகளை நம்புகிற எல்லோரும் அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.

19 இஸ்ரயேல் குடும்பத்தாரே, யெகோவாவைத் துதியுங்கள்;

ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவைத் துதியுங்கள்;

20 லேவி குடும்பத்தாரே, யெகோவாவைத் துதியுங்கள்;

அவருக்குப் பயந்து நடக்கிறவர்களே, யெகோவாவைத் துதியுங்கள்.

21 எருசலேமில் குடிகொண்டிருக்கும் யெகோவாவுக்கு,

சீயோனிலிருந்து துதி உண்டாகட்டும்.

யெகோவாவைத் துதியுங்கள்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-