Publicidade

Salmos 30

ஆலய பிரதிஷ்டையின் பாட்டாகிய தாவீதின் சங்கீதம்.

1 யெகோவாவே, உம்மை நான் புகழ்ந்து உயர்த்துவேன்,

ஏனெனில், ஆழங்களிலிருந்து நீர் என்னை வெளியே தூக்கியெடுத்தீர்;

என் பகைவர் என்னைப் பழித்து மகிழ நீர் இடமளிக்கவில்லை.

2 என் இறைவனாகிய யெகோவாவே, உதவிவேண்டி உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்;

நீர் என்னை சுகமாக்கினீர்.

3 யெகோவாவே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து மேலே கொண்டுவந்தீர்;

குழிக்குள் போய்விடாமல் என்னைத் தப்புவித்தீர்.

4 யெகோவாவினுடைய பரிசுத்தவான்களே, நீங்கள் அவருக்குத் துதி பாடுங்கள்;

அவருடைய பரிசுத்தத்தை நினைத்து நன்றி கூறுங்கள்.

5 அவருடைய கோபம் ஒரு விநாடி மட்டுமே,

ஆனால் அவருடைய தயவோ வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும்;

இரவிலே அழுகை இருந்தாலும்,

காலையிலோ மகிழ்ச்சி வரும்.

6 நான் பாதுகாப்பாய் இருக்கிறேன் என எண்ணியபோது,

"நான் ஒருபோதும் அசைக்கப்படமாட்டேன்" என்று சொன்னேன்.

7 யெகோவாவே, நீர் எனக்குத் தயை காண்பித்தபோது,

என்னுடைய மலையை உறுதியாய் நிற்கப்பண்ணினீர்;

ஆனால் நீர் உமது முகத்தை மறைத்துக்கொண்ட போது,

நான் மனம்சோர்ந்து போனேன்.

8 யெகோவாவே, நான் உம்மையே நோக்கிக் கூப்பிட்டேன்;

யெகோவாவிடம் நான் இரக்கத்திற்காகக் கதறினேன்.

9 "நான் அழிந்து

குழிக்குள் போவதால் என்ன பயன்?

தூசி உம்மைத் துதிக்குமோ?

அது உமது உண்மையை பிரசித்தப்படுத்துமோ?

10 யெகோவாவே, எனக்குச் செவிகொடும்; என்மேல் இரக்கமாயிரும்.

யெகோவாவே, எனக்கு உதவியாயிரும்."

11 என் கதறலை ஆனந்தக் களிப்பாய் மாற்றினீர்;

நீர் என்னுடைய துக்கவுடையைக் களைந்துவிட்டு,

மகிழ்ச்சியினால் என்னை உடுத்துவித்தீர்.

12 ஆதலால் என் இருதயம் மவுனமாயிராமல், உமது துதியைப் பாடிக்கொண்டே இருக்கும்;

என் இறைவனாகிய யெகோவாவே, என்றென்றைக்கும் நான் உம்மைத் துதிப்பேன்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-