Publicidade

Salmos 27

தாவீதின் சங்கீதம்.

1 யெகோவா என் வெளிச்சமும் இரட்சிப்புமாயிருக்கிறார்,

நான் யாருக்குப் பயப்படுவேன்?

யெகோவா என் வாழ்க்கையின் அரணாய் இருக்கிறார்,

நான் யாருக்குப் பயப்படுவேன்?

2 தீய மனிதர் என்னை விழுங்கும்படி

எனக்கு விரோதமாக முன்னேறி வரும்போது,

எனது பகைவரும் விரோதிகளுமான

அவர்களே தடுமாறி விழுவார்கள்.

3 ஒரு இராணுவம் என்னை முற்றுகையிட்டாலும்,

என் இருதயம் பயப்படாது;

எனக்கு விரோதமாக யுத்தம் மூண்டாலும்,

அப்பொழுதுங்கூட நான் நம்பிக்கையோடே இருப்பேன்.

4 நான் யெகோவாவிடத்தில் ஒன்றைக் கேட்கிறேன்,

அதையே நான் தேடுகிறேன்:

நான் யெகோவாவின் அழகைக் காண்பதற்கும்,

அவருடைய ஆலயத்தில் அவரை தேடுவதற்கும்

நான் என் வாழ்நாள் முழுவதும்

யெகோவாவினுடைய வீட்டில் குடியிருப்பதையே வாஞ்சிக்கிறேன்.

5 ஏனெனில் துன்ப நாளில்,

அவர் என்னைத் தமது அடைக்கலத்தில் வைத்து காத்துக்கொள்ளுவார்;

அவர் என்னைத் தமது பரிசுத்த கூடார மறைவில் ஒளித்துவைத்து,

கற்பாறையின்மேல் என்னை உயர்த்துவார்.

6 அப்பொழுது என் தலை என்னைச் சுற்றியுள்ள

பகைவர்களுக்கு மேலாக உயர்த்தப்படும்;

அவருடைய பரிசுத்த கூடாரத்திலே நான் ஆனந்த சத்தத்தோடு பலிகளையிட்டு,

யெகோவாவைப் புகழ்ந்து பாடுவேன்.

7 யெகோவாவே, நான் உம்மைக் கூப்பிடும்போது என் குரலைக் கேளும்;

என்னில் இரக்கமாயிருந்து, எனக்குப் பதில் தாரும்.

8 என் இருதயம் உம்மிடத்தில், "அவர் முகத்தையே தேடு!" என்றதால்,

யெகோவாவே, உமது முகத்தையே நான் தேடுவேன்.

9 உமது முகத்தை என்னிடமிருந்து மறைத்துக் கொள்ளாதேயும்;

கோபங்கொண்டு உமது அடியேனைத் துரத்தி விடாதேயும்;

நீரே எனக்கு உதவியாய் இருந்திருக்கிறீர்.

என் இரட்சிப்பின் இறைவனே,

என்னைப் புறக்கணிக்கவோ, கைவிடவோ வேண்டாம்.

10 என் தந்தையும் தாயும் என்னைக் கைவிட்டாலும்,

யெகோவா என்னை ஏற்றுக்கொள்வார்.

11 யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும்;

என்னைத் தீயநோக்கத்தோடு பார்த்துக் கொண்டிருப்பவர்களின் நிமித்தம்

என்னை நேரான பாதையில் நடத்தும்.

12 என் பகைவரின் ஆசைகளுக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்;

ஏனெனில் பொய்ச்சாட்சி கூறுபவர்களும்

என்னை குற்றஞ்சாட்டுபவர்களும் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள்.

13 நானோ வாழ்வோரின் நாட்டில்

யெகோவாவின் நன்மையைக் காண்பேன் என்று

இதில் நான் நம்பிக்கையாயிருக்கிறேன்.

14 யெகோவாவுக்குக் காத்திரு;

பெலன்கொண்டு தைரியமாயிரு,

யெகோவாவுக்கே காத்திரு.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-