Publicidade

Salmos 62

எதுத்தூன் என்னும் பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.

1 என் ஆத்துமா இறைவனில் இளைப்பாறுகிறது;

என் இரட்சிப்பு அவரால் வருகிறது.

2 அவரே என் கன்மலையும் என் இரட்சிப்பும் என் கோட்டையுமாய் இருக்கிறார்;

நான் ஒருபோதும் அசைக்கப்படமாட்டேன்.

3 எவ்வளவு காலத்திற்கு நீங்கள் என்னைத் தாக்குவீர்கள்?

நீங்கள் எல்லோரும் என்னைத் தூக்கி எறிந்துவிடுவீர்களா?

நான் சாய்ந்த சுவரைப் போலவும் தள்ளப்பட்ட வேலியைப் போலவும் இருக்கிறேன்.

4 என்னுடைய உயர்ந்த நிலையிலிருந்து என்னைத் தள்ளி வீழ்த்துவதற்கு

அவர்கள் ஆலோசனை செய்கிறார்கள்,

அவர்கள் பொய்களில் மகிழ்ச்சி கொள்கிறார்கள்;

அவர்கள் தங்கள் வாய்களினால் ஆசீர்வதிக்கிறார்கள்,

ஆனால் தங்களுடைய இருதயங்களிலோ சபிக்கிறார்கள்.

5 ஆம், என் ஆத்துமாவே, நீ இறைவனில் மட்டுமே இளைப்பாறு;

என் நம்பிக்கை அவரிடத்தில் இருக்கிறது.

6 அவரே என் கன்மலையும் என் இரட்சிப்பும்

என் கோட்டையுமாயிருக்கிறார்; நான் அசைக்கப்படமாட்டேன்.

7 என் இரட்சிப்பும் என் கனமும் இறைவனிடத்தில் இருக்கிறது;

இறைவன் என் பலமான கன்மலையும் என் புகலிடமுமாய் இருக்கிறார்.

8 மக்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்;

உங்கள் இருதயங்களின் பாரங்களை அவரிடத்தில் இறக்கி வையுங்கள்;

இறைவனே நமது புகலிடம்.

9 கீழ்க்குடி மனிதர் வெறும் சுவாசமே,

உயர்குடி மனிதர் வெறும் பொய்யே;

தராசில் நிறுக்கப்பட்டால் அவர்கள் ஒன்றுமில்லை;

அவர்கள் சுவாசத்திலும் லேசானவர்கள்.

10 பயமுறுத்தி பறித்தெடுப்பதில் நம்பிக்கை வைக்காதே;

களவாடிய பொருட்களைக் குறித்துப் பெருமைகொள்ளாதே;

உனது செல்வங்கள் அதிகரித்தாலும்,

உன் இருதயத்தை அவைகளின்மேல் வைக்காதே.

11 இறைவன் ஒருமுறை பேசினார்,

நான் இரண்டுதரம் கேட்டிருக்கிறேன்:

"இறைவனே, வல்லமை உமக்கே உரியது,

12 ஆண்டவரே, உடன்படிக்கையின் அன்பும் உம்முடையது";

நிச்சயமாகவே, "நீர் ஒவ்வொருவருக்கும்

அவனவன் செய்ததற்குத் தக்கதாக பலனளிப்பீர்."

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-22_10-02-25-