Publicidade

Salmos 4

கம்பியிசைக் கருவிகளுடன் பாடப்பட்டு பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.

1 நீதியுள்ள என் இறைவனே,

நான் கூப்பிடும்போது எனக்குப் பதில் தாரும்.

என் துயரத்திலிருந்து எனக்கு ஆறுதலைக் கொடும்;

என்மேல் இரக்கமாயிருந்து என் ஜெபத்தைக் கேளும்.

2 மனிதர்களே, எவ்வளவு காலத்திற்கு என் மகிமையை வெட்கமாக மாற்றுவீர்கள்?

எவ்வளவு காலத்திற்கு வெறுமையானவைகளை விரும்பி, பொய்யான தெய்வங்களைத் தேடுவீர்கள்?

3 யெகோவா பக்தியுள்ளவர்களைத் தமக்காகத் தெரிந்துகொண்டார் என்று அறியுங்கள்;

நான் யெகோவாவைக் கூப்பிடும்போது அவர் செவிகொடுப்பார்.

4 நீங்கள் உங்கள் கோபத்தில் பாவம் செய்யவேண்டாம்;

நீங்கள் உங்கள் படுக்கையில் இருக்கும்போது,

உங்கள் இருதயங்களை ஆராய்ந்து அமைதியாயிருங்கள்.

5 நீதியான பலிகளைச் செலுத்தி,

யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருங்கள்.

6 "எங்களுக்கு நன்மையைக் காட்டுகிறவன் யார்?" என்று அநேகர் கேட்கிறார்கள்;

யெகோவாவே, உம்முடைய முகத்தின் ஒளி எங்கள்மேல் பிரகாசிக்கட்டும்.

7 தானியமும் புதுத் திராட்சை இரசமும்

நிறைந்திருக்கிற காலத்தின் மகிழ்ச்சியைவிட

அதிக மகிழ்ச்சியினால் நீர் என் இருதயத்தை நிரப்பியிருக்கிறீர்.

8 நான் படுத்து மன அமைதியுடன் உறங்குவேன்;

ஏனெனில் யெகோவாவே,

நீர் மட்டுமே என்னைப் பாதுகாப்பாகக் குடியிருக்கச் செய்கிறீர்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_06-35-37-