Publicidade

Salmos 144

தாவீதின் சங்கீதம்.

1 என் கன்மலையாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக,

அவர் என் கைகளை யுத்தத்திற்கும்,

என் விரல்களை போர்புரிவதற்கும் பயிற்றுவிக்கிறார்.

2 அவர் என் அன்பான இறைவன், என் கோட்டை,

என் அரண், என் மீட்பர்,

அவரே நான் தஞ்சம் அடைகிற என் கேடயம்,

நாடுகளை அவர் எனக்குக் கீழ்படுத்துகிறார்.

3 யெகோவாவே, மனிதனைக் குறித்து நீர் அக்கறை கொள்வதற்கும்,

வெறும் மனிதர்களை நீர் நினைப்பதற்கும் அவர்கள் யார்?

4 மனிதன் ஒரு சுவாசத்தைப்போல் இருக்கிறான்;

அவன் நாட்கள் துரிதமாய் மறையும் நிழலைப்போல் இருக்கின்றன.

5 யெகோவாவே, உமது வானங்களைப் பிரித்துக் கீழே வாரும்;

மலைகள் புகையும்படியாக, அவைகளைத் தொடும்.

6 மின்னல்களை அனுப்பி, பகைவர்களைச் சிதறடியும்;

உமது அம்புகளை எய்து அவர்களை முறியடியும்.

7 உமது கரத்தை உயரத்திலிருந்து கீழே நீட்டும்;

பெருவெள்ளத்திலிருந்தும், பிறநாட்டினரின் கைகளிலிருந்தும்

என்னை விடுவித்துத் தப்புவியும்.

8 அவர்களின் வாய்கள் பொய்களினால் நிறைந்திருக்கின்றன;

அவர்களுடைய வலதுகைகள் வஞ்சனை உடையவைகளாய் இருக்கின்றன.

9 இறைவனே, நான் உமக்கு ஒரு புதுப்பாட்டைப் பாடுவேன்;

பத்து நரம்பு வீணையினால் நான் உமக்கு இசை மீட்டுவேன்.

10 ஏனெனில் அரசர்களுக்கு வெற்றியைக் கொடுப்பவரும்

உமது அடியவனாகிய தாவீதை விடுவிப்பவரும் நீரே.

11 கொடிய வாளினின்று என்னை விடுவித்தருளும்;

பொய்பேசும் வாய்களையும்,

வஞ்சனையுள்ள வலது கைகளையுமுடைய

வேறுநாட்டைச் சேர்ந்தவரின் கைகளிலிருந்து என்னை விடுவித்துத் தப்புவியும்.

12 அப்பொழுது எங்கள் மகன்கள் தங்கள் வாலிபத்தில்

நன்றாய்ப் பராமரிக்கப்பட்ட செடிகளைப்போல் இருப்பார்கள்;

எங்கள் மகள்கள் அரண்மனையை அலங்கரிப்பதற்கென

செதுக்கப்பட்ட தூண்களைப்போல் இருப்பார்கள்.

13 எங்கள் களஞ்சியங்கள்

சகலவித விளைபொருட்களாலும் நிரப்பப்படும்;

எங்கள் நிலங்களில் எங்கள் ஆடுகள் ஆயிரக்கணக்கிலும்,

பதினாயிரக்கணக்கிலும் பெருகும்.

14 எங்கள் எருதுகள் பாரமான பொதிகளை இழுக்கும்;

எங்கள் நகரத்தின் சுவர்களில் ஒன்றும் உடைக்கப்படுவதில்லை,

கைதிகளாக யாரும் சிறைபிடிக்கப்படுவதில்லை;

எங்கள் வீதிகளில் துன்பத்தின் அழுகையும் கேட்கப்படுவதில்லை.

15 இவற்றை உண்மையாக அடைந்த மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்;

யெகோவாவைத் தங்கள் இறைவனாகக் கொண்ட மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-