Publicidade

Salmos 5

புல்லாங்குழல்களுடன் பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.

1 யெகோவாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும்,

என் பெருமூச்சைக் கவனியும்.

2 உதவிக்காய் கதறும் என் சத்தத்தைக் கேளும்,

என் அரசனே, என் இறைவனே,

உம்மிடமே நான் வேண்டுகிறேன்.

3 யெகோவாவே, காலையிலே என் குரலைக் கேளும்;

நான் என் வேண்டுதல்களைக் காலையில் உம்முன் வைத்து,

எதிர்பார்ப்புடன் காத்திருப்பேன்.

4 நீர் கொடுமையானதில் மகிழ்ச்சியடையும் இறைவன் அல்ல;

தீயவர் உம்முடன் குடியிருக்க முடியாது.

5 திமிர் பிடித்தவர்கள்

உமது சமுகத்தில் நிற்கமுடியாது;

அநியாயம் செய்யும் எல்லோரையும் நீர் வெறுக்கிறீர்.

6 பொய் சொல்கிறவர்களை நீர் அழிக்கிறீர்;

இரத்த வெறியரையும் வஞ்சகமுள்ள மனிதரையும்

யெகோவா அருவருக்கிறார்.

7 ஆனால் நானோ, உமது மிகுந்த உடன்படிக்கையின் அன்பினாலே

உமது வீட்டிற்கு வந்து,

உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்கி

பயபக்தியுடன் வணங்குவேன்.

8 யெகோவாவே, என் எதிராளிகளின் நிமித்தம்

உம்முடைய நீதியில் என்னை வழிநடத்தும்;

உமது வழியை எனக்கு முன்பாக நேராக்கும்.

9 அவர்களுடைய வாயின் வார்த்தை ஒன்றைகூட நம்பமுடியாது;

அவர்களுடைய இருதயம் அழிவினால் நிரம்பியிருக்கிறது;

அவர்களின் தொண்டையோ திறந்திருக்கும் சவக்குழி;

அவர்கள் தங்கள் நாவினால் வஞ்சகம் பேசுகிறார்கள்.

10 இறைவனே, அவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பளியும்;

அவர்களுடைய சதித்திட்டங்களினாலேயே அவர்கள் விழுந்துபோகட்டும்.

அவர்களுடைய அநேக பாவங்களின் நிமித்தம், அவர்களைத் துரத்திவிடும்;

ஏனெனில், அவர்கள் உமக்கு விரோதமாகக் கலகம் செய்திருக்கிறார்கள்.

11 ஆனால் உம்மிடத்தில் அடைக்கலம் புகுவோர் அனைவரும் மகிழ்ச்சியடையட்டும்;

அவர்கள் சந்தோஷத்தினால் என்றென்றும் பாடட்டும்;

உமது பெயரை நேசிக்கிறவர்கள் உம்மில் களிப்படையும்படி,

அவர்களை உமது பாதுகாப்பினால் மூடிக்கொள்ளும்.

12 யெகோவாவே, நீர் நிச்சயமாகவே நீதிமான்களை ஆசீர்வதிக்கிறவர்;

ஒரு கேடயத்தைப் போல, உமது தயவினால் நீர் அவர்களைச் சூழ்ந்துகொள்ளுவீர்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-