Publicidade

Salmos 77

பாடகர் குழுத் தலைவன் எதுத்தூனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் சங்கீதம்.

1 நான் உதவிக்காக இறைவனை நோக்கி அழுதேன்;

எனக்குச் செவிகொடுக்கும்படியாக நான் இறைவனை நோக்கி அழுதேன்.

2 நான் துன்பத்தில் இருந்தபோது ஆண்டவரைத் தேடினேன்;

இரவில் என் கைகளைத் தளராமல் உயர்த்தினேன்,

என் ஆத்துமாவோ ஆறுதலடைய மறுத்தது.

3 இறைவனே, உம்மை நான் நினைவுகூர்ந்தேன், நான் புலம்பினேன்;

நான் தியானித்தேன், என் ஆவியோ சோர்ந்துபோயிற்று.

4 நீர் என் கண்களை மூடாதபடி தடுத்தீர்;

நான் பேசமுடியாதபடி மிகவும் கஷ்டப்பட்டேன்.

5 முந்தின நாட்களையும்,

கடந்துபோன வருடங்களைப்பற்றியும் நான் நினைத்தேன்;

6 நான் இரவில் என் பாடல்களை நினைவுகூர்ந்தேன்.

என் இருதயம் தியானித்தது, என் ஆவியோ இப்படி விசாரணை செய்தது:

7 "யெகோவா என்றென்றும் புறக்கணிப்பாரோ?

அவர் மீண்டும் ஒருபோதும் தயவு காண்பிக்கமாட்டாரோ?

8 அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் ஒழிந்துபோயிற்றோ?

அவருடைய வாக்குத்தத்தம் தலைமுறை தலைமுறைக்கும் அற்றுப்போயிற்றோ?

9 இறைவன் தயைசெய்ய மறந்துவிட்டாரோ?

அவர் தமது கோபத்தில் இரக்கங்காட்ட மறுத்துவிட்டாரோ?"

10 அப்பொழுது நான்: "மகா உன்னதமானவரின் வலதுகரம்,

எனக்காக செயலாற்றுகிறது,

11 யெகோவாவின் செயல்களை நான் நினைவுகூருவேன்;

ஆம், முற்காலத்தில் நீர் செய்த அற்புதங்களை நான் நினைவிற்கொள்வேன்.

12 உமது செய்கைகளையெல்லாம் நான் தியானிப்பேன்;

உமது வல்லமையான செயல்களை நான் சிந்திப்பேன்" என்றேன்.

13 இறைவனே, உமது வழிகள் பரிசுத்தமானவை;

நம்முடைய இறைவனைப்போல் பெரிய தெய்வம் யார்?

14 அற்புதங்களைச் செய்கிற இறைவன் நீரே;

நீர் மக்கள் மத்தியில் உமது வல்லமையை வெளிப்படுத்துகிறீர்.

15 உமது வல்லமையுள்ள புயத்தினால்

யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் சந்ததியான உமது மக்களை நீர் மீட்டுக்கொண்டீர்.

16 இறைவனே, சமுத்திரம் உம்மைக் கண்டது,

சமுத்திரம் உம்மைக் கண்டு தத்தளித்தது;

மகா ஆழங்களும் நடுங்கின.

17 மேகங்கள் தண்ணீரைப் பொழிந்தன,

ஆகாயங்கள் முழங்கி அதிர்ந்தன;

உமது அம்புகள் அங்கும் இங்கும் மின்னிப் பாய்ந்தன.

18 உமது இடியொலி சுழற்காற்றில் கேட்டது,

உமது மின்னல் உலகத்திற்கு வெளிச்சம் கொடுத்தது;

பூமி நடுங்கி அதிர்ந்தது.

19 உமது பாதை கடலிலும்,

உமது வழி பெருவெள்ளத்திலும் இருந்தது;

ஆனாலும் உமது அடிச்சுவடுகள் காணப்படவில்லை.

20 மோசே, ஆரோன் என்பவர்களுடைய கையினால்

நீர் உமது மக்களை ஒரு மந்தையைப்போல் நடத்தினீர்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-