Publicidade

Salmos 132

சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.

1 யெகோவாவே, தாவீதையும்

அவன் சகித்துக்கொண்ட எல்லாத் துன்பங்களையும் நினைவிற்கொள்ளும்.

2 அவன் யெகோவாவுக்குச் சத்தியத்தை ஆணையிட்டு,

யாக்கோபின் வல்லவருக்கு இப்படி ஒரு நேர்த்திக்கடன் செய்தான்:

3 "நான் என் வீட்டிற்குள் நுழையமாட்டேன்,

என் படுக்கைக்குப் போகவுமாட்டேன்.

4 என் கண்களுக்கு நித்திரையையும்,

கண்ணிமைகளுக்கு தூக்கத்தையும் வரவிடமாட்டேன்.

5 யெகோவாவுக்காக ஒரு இடத்தை,

யாக்கோபின் வல்லவராகிய இறைவனுக்காக ஒரு வாழ்விடத்தைக் கட்டும்வரை

இவற்றைச் செய்யமாட்டேன்."

6 எப்பிராத்தாவிலே நாம் அதைக் கேள்விப்பட்டு,

யாரீமின் வயல்வெளிகளில் நாம் அதைக் கண்டோம்:

7 "நாம் அவருடைய வாழ்விடத்திற்குப் போவோம்,

அவருடைய பாதபடியில் வழிபடுவோம்.

8 ‘யெகோவாவே, எழுந்து உமது வாழ்விடத்திற்கு வாரும்,

உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் வாரும்.

9 உம்முடைய ஆசாரியர்கள் நீதியை உடுத்திக்கொள்ளட்டும்;

உமது பரிசுத்தவான்கள் மகிழ்ச்சியுடன் பாடட்டும்.’ "

10 உமது அடியவனாகிய தாவீதின் நிமித்தம்,

நீர் அபிஷேகித்தவரை புறக்கணியாதேயும்.

11 யெகோவா தாவீதுக்கு ஒரு சத்தியத்தை ஆணையிட்டார்;

அது நிச்சயமான வாக்கு; அவர் இதை நிறைவேற்றாமல் விடமாட்டார்:

"உன்னுடைய சொந்த சந்ததியில் ஒருவனை

நான் உன் சிங்காசனத்தில் அமர்த்துவேன்.

12 உன் மகன்கள் என் உடன்படிக்கையையும்,

நான் அவர்களுக்குப் போதிக்கிற நியமங்களையும் கைக்கொள்வார்களானால்,

அவர்களுடைய மகன்களும்

என்றென்றும் உன் சிங்காசனத்தில் அமருவார்கள்."

13 யெகோவா சீயோனைத் தெரிந்துகொண்டார்;

அவர் அதையே தமது இருப்பிடமாக்க விரும்பியிருக்கிறார்:

14 "இது என்றென்றைக்கும் நான் தங்குமிடம்;

இவ்விடத்தை நான் விரும்பியிருக்கிறபடியால்,

இங்கேயே நான் சிங்காசனத்தில் அமர்ந்திருப்பேன்.

15 நான் சீயோனை ஏராளமான உணவுப் பொருட்களால் ஆசீர்வதிப்பேன்;

அங்குள்ள ஏழைகளை உணவினால் திருப்தியாக்குவேன்.

16 அங்குள்ள ஆசாரியருக்கு நான் இரட்சிப்பை உடுத்துவேன்;

அங்குள்ள பரிசுத்தவான்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் பாடுவார்கள்.

17 "இங்கே தாவீதுக்காக, ஒரு வல்லமையுள்ள அரசனை வளரப்பண்ணுவேன்;

நான் அபிஷேகம் செய்தவனுக்காக, ஒரு விளக்கையும் ஏற்படுத்துவேன்.

18 அவனுடைய பகைவரை வெட்கத்தால் உடுத்துவேன்;

ஆனால் அவனுடைய தலையின் கிரீடமோ பிரகாசிக்கும்."

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-19_11-20-24-