Publicidade

Salmos 40

பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.

1 நான் யெகோவாவுக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்;

அவர் என் பக்கமாய்த் திரும்பி என் கதறுதலைக் கேட்டார்.

2 அழிவின் குழியிலிருந்தும்

மண் சகதியிலிருந்தும் அவர் என்னை வெளியே தூக்கியெடுத்தார்,

அவர் கற்பாறைமேல் என் கால்களை நிறுத்தி,

நிற்பதற்கு ஒரு உறுதியான இடத்தையும் எனக்குக் கொடுத்தார்.

3 எங்கள் இறைவனைத் துதிக்கும் ஒரு துதியின் கீதமான

புதுப்பாட்டை அவர் என் வாயிலிருந்து வரச்செய்தார்.

அநேகர் அதைக்கண்டு பயந்து,

யெகோவாவிடம் தங்கள் நம்பிக்கையை வைப்பார்கள்.

4 பொய்யான கடவுள்களைப் பற்றிக்கொள்ளாமலும்,

அகந்தை உள்ளவர்களைச் சாராமலும்,

யெகோவாவைத் தனது நம்பிக்கையாகக் கொண்டிருக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

5 என் இறைவனாகிய யெகோவாவே,

நீர் எங்களுக்காக செய்துள்ள அதிசயங்களும்

உம்முடைய திட்டங்களும் அநேகம்.

உமக்கு நிகரானவர் ஒருவரும் இல்லை;

அவைகளைக் குறித்து நான் விவரிக்கப்போனால்,

அவை எடுத்துரைக்க முடியாதளவு ஏராளமானவைகள்.

6 பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை;

தகன காணிக்கைகளும் பாவநிவாரண காணிக்கைகளும் உமக்குத் தேவையில்லை;

ஆனால் நான் கேட்டுக் கீழ்ப்படிவதற்கு என் செவிகளைத் திறந்துவிட்டீர்.

7 அப்பொழுது நான், "இதோ, நான் வருகிறேன்;

புத்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறதே.

8 என் இறைவனே, நான் உமது விருப்பத்தைச் செய்ய விரும்புகிறேன்;

உமது சட்டம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது" என்று சொன்னேன்.

9 மகா சபையில் உமது நீதியை பிரசித்தப்படுத்துகிறேன்;

யெகோவாவே, நீர் அறிந்திருக்கிறபடி

நான் என் உதடுகளை மூடுவதில்லை.

10 நான் உமது நீதியை என் உள்ளத்தில் மறைப்பதில்லை;

உமது உண்மையையும்,

இரட்சிப்பையும் குறித்து நான் பேசுகிறேன்.

உமது உடன்படிக்கையின் அன்பையும் உண்மையையும் மகா சபைக்கு நான் மறைக்கவுமில்லை.

11 யெகோவாவே, எனக்கு இரக்கத்தைக் காட்டாமல் விடாதேயும்;

உமது உடன்படிக்கையின் அன்பும் உமது உண்மையும் எப்போதும் என்னைப் பாதுகாப்பதாக.

12 ஏனெனில் எண்ணற்ற இன்னல்கள் என்னைச் சூழ்கின்றன;

என் பாவங்கள் என்னை மூடிக்கொண்டதால், நான் பார்க்க முடியாதிருக்கிறேன்.

என் தலையிலுள்ள முடியைப் பார்க்கிலும், அவைகள் அதிகமானவை;

அதினால் என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது.

13 யெகோவாவே, தயவுசெய்து என்னைக் காப்பாற்றும்;

யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைவாய் வாரும்.

14 என் உயிரை அழிக்கத் தேடுகிற யாவரும்

வெட்கப்பட்டுக் குழப்பமடைவார்களாக;

எனது அழிவை விரும்புகிற யாவரும்

அவமானமடைந்து திரும்புவார்களாக.

15 என்னைப் பார்த்து, "ஆ! ஆ!" என்று ஏளனம் செய்கிறவர்கள்

அவர்களுடைய வெட்கத்தினால் நிலைகுலைந்து போவார்களாக.

16 ஆனால் உம்மைத் தேடுகிற யாவரும்

உம்மில் மகிழ்ந்து களிகூருவார்களாக;

உமது இரட்சிப்பை விரும்புவோர், "யெகோவா பெரியவர்!"

என்று எப்போதும் சொல்வார்களாக.

17 நானோ, ஏழையும் எளியவனுமாயிருக்கிறேன்;

யெகோவா என்னை நினைப்பாராக.

நீரே என் துணை, நீரே என் மீட்பர்;

என் இறைவனே, தாமதியாதேயும்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-