Publicidade

Salmos 12

செமினீத் என்னும் இராகத்தில் வாசிக்க பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.

1 யெகோவாவே, உதவிசெய்யும், இறை பக்தியுள்ளவர் ஒருவருமே இல்லை;

மனிதருள் உண்மையுள்ளவர்கள் குறைந்துவிட்டார்கள்.

2 ஒவ்வொருவனும் தன் அயலானிடம் பொய்ப் பேசுகிறான்;

அவர்களுடைய உதடுகளால் முகஸ்துதி பேசி

இருதயத்தில் வஞ்சனை வைத்திருக்கிறார்கள்.

3 முகஸ்துதி பேசும் எல்லா உதடுகளையும்

பெருமை பேசும் ஒவ்வொரு நாவையும் யெகோவா அறுத்துப் போடுவாராக.

4 "எங்கள் நாவினாலேயே நாங்கள் வெற்றி கொள்வோம்;

எங்கள் சொற்களே எங்களுக்குத் துணை; எங்களுக்குத் தலைவர் யார்?"

என்று அவர்கள் சொல்லுகிறார்கள்.

5 "ஏழைகள் ஒடுக்கப்படுகிறார்கள்; எளியவர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இதினால் நான் இப்பொழுது எழுந்து,

அவர்களைத் துன்புறுத்துவோரிடமிருந்து காப்பாற்றுவேன்" என்று யெகோவா கூறுகிறார்.

6 யெகோவாவின் வார்த்தைகள் தூய்மையானவை.

அவை களிமண் உலையில்

ஏழு தரம் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளியைப்போல் இருக்கின்றன.

7 யெகோவாவே, நீர் ஏழைகளாகிய அவர்களைப் பாதுகாப்பாய் வைத்துக்கொள்வீர்;

கொடியவர்களிடமிருந்து எங்களை என்றென்றும் காத்துக்கொள்வீர்.

8 இழிவான செயல்கள் மனிதர் மத்தியில் பாராட்டப்படுவதினால்

கொடியவர்கள் வீம்புடன் சுற்றித் திரிகிறார்கள்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-