Publicidade

Salmos 118

1 யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்;

அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.

2 "அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது" என்று

இஸ்ரயேலர் சொல்வார்களாக.

3 "அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது" என்று

ஆரோன் குடும்பத்தவரான ஆசாரியர்கள் சொல்வார்களாக.

4 "அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது" என்று

யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்கள் சொல்வார்களாக.

5 நான் நெருக்கத்திலிருந்து யெகோவாவைக் கூப்பிட்டேன் எனக்குப் பதிலளித்து,

விசாலமான இடத்தில் என்னை நடத்தினார்.

6 யெகோவா என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன்;

மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்?

7 யெகோவா என்னோடு இருக்கிறார், அவரே என் உதவியாளர்;

என்னைப் பகைக்கிறவர்களுக்கு நேரிடுவதை நான் காண்பேன்.

8 மனிதனில் நம்பிக்கை வைப்பதைப் பார்க்கிலும்,

யெகோவாவிடத்தில் தஞ்சம் அடைவதே மேலானது.

9 அதிகாரிகள் மீது நம்பிக்கை வைப்பதைப் பார்க்கிலும்,

யெகோவாவிடத்தில் தஞ்சம் அடைவதே சிறந்தது.

10 எல்லா மக்களும் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்;

ஆனாலும் யெகோவாவின் பெயரில் நான் அவர்களை மேற்கொண்டேன்.

11 அவர்கள் எல்லாப் பக்கங்களிலும் என்னை வளைத்துக்கொண்டார்கள்;

ஆனாலும் யெகோவாவின் பெயரிலேயே நான் அவர்களை மேற்கொண்டேன்.

12 அவர்கள் தேனீக்களைப்போல என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்;

ஆனாலும் அவர்கள் எரியும் முட்செடிகளைப்போல் விரைவாக மறைந்துபோனார்கள்;

யெகோவாவின் பெயரால் நான் அவர்களை மேற்கொண்டேன்.

13 நான் பின்னோக்கித் தள்ளப்பட்டு, விழப்போனேன்;

ஆனால் யெகோவாவோ எனக்கு உதவி செய்தார்.

14 யெகோவா என் பெலமும், என் பாடலுமாய் இருக்கிறார்;

அவரே எனக்கு இரட்சிப்புமானார்.

15 நீதிமான்களின் கூடாரங்களில்,

வெற்றியின் மகிழ்ச்சிக் குரல் திரும்பத்திரும்ப ஒலிக்கின்றன:

"யெகோவாவின் வலதுகரம் வல்லமையான செயல்களைச் செய்திருக்கிறது.

16 யெகோவாவின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது;

யெகோவாவின் வலதுகரம் வல்லமையான காரியங்களைச் செய்திருக்கிறது."

17 நான் வாழுவேன், சாகமாட்டேன்.

நான் வாழ்ந்து யெகோவா செய்தவற்றை அறிவிப்பேன்.

18 யெகோவா என்னைக் கடுமையாகத் தண்டித்தார்,

ஆனாலும் அவர் என்னை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கவில்லை.

19 நீதியின் வாசல்களை எனக்காகத் திறவுங்கள்;

நான் உள்ளே சென்று யெகோவாவுக்கு நன்றி செலுத்துவேன்.

20 இதுவே யெகோவாவின் வாசல்;

நீதிமான்கள் அதின் உள்ளே செல்வார்கள்.

21 நீர் எனக்குப் பதிலளித்தபடியால், நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்;

என் இரட்சிப்பு நீரே.

22 வீடு கட்டுகிறவர்கள் புறக்கணித்த கல்லே

மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.

23 யெகோவாவே இதைச் செய்தார்,

இது நமது கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

24 யெகோவா உண்டாக்கின நாள் இதுவே;

இதிலே நாம் மகிழ்ந்து களிகூருவோம்.

25 யெகோவாவே, எங்களை இரட்சியும்;

யெகோவாவே, எங்களுக்கு வெற்றியைத் தாரும்.

26 யெகோவாவின் பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்;

யெகோவாவினுடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம்.

27 யெகோவாவே இறைவன்,

அவர் தமது ஒளியை நம்மேல் பிரகாசிக்கச் செய்திருக்கிறார்;

பண்டிகை பலியைக் கையில் எடுத்துக்கொண்டு,

பலிபீடத்தின் கொம்புகளில் கயிற்றைக் கட்டி

ஊர்வலத்தில் கலந்துகொள்ளுங்கள்.

28 நீரே என் இறைவன், நான் உமக்கு நன்றி செலுத்துவேன்;

நீரே என் இறைவன், நான் உம்மைப் புகழ்ந்து உயர்த்துவேன்.

29 யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்;

அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-