Publicidade

Salmos 66

பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதமாகிய பாட்டு.

1 பூமியிலுள்ளவர்களே, நீங்கள் எல்லோரும் சந்தோஷத்துடன்

இறைவனை ஆர்ப்பரித்துத் துதியுங்கள்!

2 அவருடைய பெயரின் மகிமையைப் பாடுங்கள்;

அவருடைய துதியை மகிமையுள்ளதாக்குங்கள்.

3 இறைவனிடம் சொல்லுங்கள், "உமது செயல்கள் எவ்வளவு பிரமிக்கத்தக்கவை!

உமது வல்லமை பெரிதானது;

அதினால் பகைவர்கள் உமக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள்.

4 பூமியிலுள்ள அனைவரும் உம்மைப் பணிந்து வழிபடுகிறார்கள்;

அவர்கள் உமக்குத் துதி பாடுகிறார்கள்,

அவர்கள் உமது பெயருக்குத் துதி பாடுகிறார்கள்."

5 இறைவன் செய்துள்ளவற்றை வந்து பாருங்கள்;

மனிதரிடையே அவர் செய்யும் செயல்கள் எவ்வளவு பயப்படத்தக்கவை.

6 அவர் கடலை வறண்ட நிலமாக மாற்றினார்;

மக்கள் கால்நடையாய் தண்ணீரைக் கடந்தார்கள்;

வாருங்கள், அவரில் களிகூருவோம்.

7 அவர் தமது வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்;

அவருடைய கண்கள் நாடுகளைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றன;

கலகக்காரர் அவருக்கு எதிராக எழும்பாதிருக்கட்டும்.

8 எல்லா மக்களும், நம்முடைய இறைவனைத் துதியுங்கள்;

அவரைத் துதிக்கும் சத்தம் கேட்கப்படுவதாக.

9 அவர் நம்முடைய உயிர்களைப் பாதுகாத்திருக்கிறார்;

நம்முடைய பாதங்கள் சறுக்கிவிடாதபடி காத்துக்கொள்கிறார்.

10 இறைவனே, நீர் எங்களைச் சோதித்துப் பார்த்தீர்;

வெள்ளியைப்போல் எங்களைப் புடமிட்டுச் சுத்திகரித்தீர்.

11 எங்களைச் சிறைபிடித்து,

எங்கள் முதுகுகளில் பாரங்களை சுமத்தினீர்.

12 மனிதரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகச் செய்தீர்;

நாங்கள் நெருப்பையும் தண்ணீரையும் கடந்துசென்றோம்,

ஆனால் நீர் எங்களைச் செழிப்பான இடத்திற்கு கொண்டுவந்தீர்.

13 நான் தகன காணிக்கைகளுடன் உமது ஆலயத்திற்கு வருவேன்;

எனது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவேன்.

14 நான் துன்பத்திலிருந்தபோது

என் உதடுகளைத் திறந்து, என் வாயினால் சொன்ன நேர்த்திக் கடன்களைச் செய்வேன்.

15 நான் கொழுத்த மிருகங்களையும்

செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன்;

நான் எருதுகளையும் வெள்ளாடுகளையும் காணிக்கையாகச் செலுத்துவேன்.

16 இறைவனுக்குப் பயப்படுகிறவர்களே, நீங்கள் எல்லோரும் வந்து, செவிகொடுங்கள்;

அவர் எனக்குச் செய்தவற்றை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

17 நான் என் வாயினால் அவரைச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்;

அவருடைய துதி என் நாவில் இருந்தது.

18 என் இருதயத்தில் பாவத்திற்கு இடமளித்திருந்தால்,

யெகோவா எனக்குச் செவிகொடுக்கமாட்டார்;

19 இறைவனோ நிச்சயமாய் எனக்குச் செவிகொடுத்து,

என் மன்றாட்டின் குரலைக் கேட்டார்.

20 என் மன்றாட்டைத் தள்ளிவிடாமல்,

என்னிடமிருந்து தமது உடன்படிக்கையின் அன்பை விலக்காமலிருந்த

இறைவனுக்குத் துதி உண்டாகட்டும்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-