Publicidade

Salmos 32

மஸ்கீல் என்னும் தாவீதின் சங்கீதம்.

1 யாருடைய மீறுதல்கள் மன்னிக்கப்பட்டதோ,

யாருடைய பாவங்கள் மூடப்பட்டதோ,

அவர்கள் பாக்கியவான்கள்.

2 யாருடைய பாவத்தைக்குறித்து,

அவர்களுக்கு விரோதமாக யெகோவா கணக்கிடாதிருக்கிறாரோ,

யாருடைய ஆவியில் வஞ்சனை இல்லாதிருக்கிறதோ, அவர்கள் பாக்கியவான்கள்.

3 நான் என் பாவத்தைக்குறித்து மவுனமாய் இருந்தபோது,

தினமும் என் அழுகையினால்,

என் எலும்புகள் பலவீனமாயிற்று.

4 இரவும் பகலும்

உமது கரம் பாரமாயிருந்தது;

ஆதலால், கோடைகால வெப்பத்தினால் ஈரம் வறண்டுபோகிறது போல,

என் பெலன் வறண்டுபோயிற்று.

5 அதின்பின் நான் என் பாவத்தை

உம்மிடத்தில் ஒத்துக்கொண்டேன்;

என் அநியாயத்தையும் நான் மறைக்கவில்லை.

நான், "யெகோவாவிடம் என் மீறுதல்களை அறிக்கையிடுவேன்"

என்று சொன்னேன்;

நீர் என் பாவத்தின் குற்றத்தை மன்னித்தீர்.

6 ஆகவே பக்தியுள்ள ஒவ்வொருவரும் உம்மைக் காணத்தக்க காலத்தில்

உம்மை நோக்கி மன்றாடட்டும்;

பெருவெள்ளம் எழும்பும்போது

நிச்சயமாய் அது அவர்களை அணுகாது.

7 நீர் என் மறைவிடமாயிருக்கிறீர்;

நீர் என்னை இக்கட்டிலிருந்து பாதுகாத்து,

மீட்பின் பாடல்களால் என்னைச் சூழ்ந்துகொள்வீர்.

8 யெகோவா சொல்கிறதாவது: "நான் உனக்கு அறிவுறுத்தி,

நீ போகவேண்டிய வழியை உனக்குப் போதிப்பேன்;

நான் உனக்கு கரிசனையோடு ஆலோசனை சொல்லுவேன்.

9 புத்தியில்லாத குதிரையைப் போலவோ,

கோவேறு கழுதையைப் போலவோ நீ இருக்கவேண்டாம்;

கடிவாளத்தினால் கட்டுப்படுத்தப்பட்டால் ஒழிய,

அவை உன் கட்டுப்பாட்டின்கீழ் வருவதில்லை."

10 கொடுமையானவனுக்கு வரும் கேடுகள் அநேகமானவை,

ஆனால் யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருக்கிறவனையோ,

அவருடைய உடன்படிக்கையின் அன்பு சூழ்ந்துகொள்கிறது.

11 நீதிமான்களே, நீங்கள் யெகோவாவிடம் களிகூர்ந்து மகிழுங்கள்;

உள்ளத்தில் உண்மையுள்ளவர்களே, நீங்கள் அனைவரும் துதி பாடுங்கள்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_09-43-29-