Publicidade

Salmos 143

தாவீதின் சங்கீதம்.

1 யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும்,

இரக்கத்திற்கான என் கதறுதலுக்குச் செவிகொடும்;

உமது உண்மையின்படியும்

நீதியின்படியும் எனக்கு பதில் தாரும்.

2 உமது அடியானை நியாயந்தீர்க்காதேயும்.

வாழ்கின்ற ஒருவருமே உமக்கு முன்பாக நீதிமான்கள் இல்லையே.

3 பகைவன் என்னைப் பின்தொடர்கிறான்,

அவன் என்னை தரையில் போட்டு தாக்குகிறான்;

வெகுகாலத்திற்கு முன்பு இறந்தவர்களைப்போல்,

அவன் என்னை இருளில் குடியிருக்கப்பண்ணுகிறான்.

4 ஆகவே எல்லா நம்பிக்கையையும் இழந்து என் ஆவி எனக்குள் சோர்ந்துபோகிறது;

பயத்தால் என் இருதயம் கலங்குகிறது.

5 நான் முந்தின நாட்களை நினைக்கிறேன்;

உமது செயல்களையெல்லாம் தியானிக்கிறேன்;

உமது கரத்தின் செயல்களை யோசிக்கிறேன்.

6 நான் உம்மை நோக்கி என் கைகளை விரிக்கிறேன்;

வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகம் கொண்டிருக்கிறது.

7 யெகோவாவே, சீக்கிரமாய் எனக்குப் பதில் தாரும்;

என் உள்ளம் சோர்ந்துபோகிறது;

உமது முகத்தை என்னிடமிருந்து மறையாதேயும்; இல்லாவிட்டால்,

நான் மரணக் குழியில் இறங்குகிறவர்களைப் போலாகிவிடுவேன்.

8 காலை வேளையானது உமது உடன்படிக்கையின் அன்பின் செய்தியைக் கொண்டுவரட்டும்,

ஏனெனில் நான் என் நம்பிக்கையை உம்மிலேயே வைத்திருக்கிறேன்;

நான் போகவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்,

ஏனெனில் என் உயிரை உம்மிடத்தில் ஒப்படைக்கிறேன்.

9 யெகோவாவே, என் பகைவரிடமிருந்து என்னைத் தப்புவியும்;

ஏனெனில் நான் உமக்குள் என்னை மறைத்துக்கொள்கிறேன்.

10 நீரே என் இறைவன்;

ஆதலால் உமது சித்தத்தைச் செய்ய எனக்குப் போதியும்;

உமது நல்ல ஆவியானவர்

என்னை நல்வழியில் நடத்துவாராக.

11 யெகோவாவே, உமது பெயரின் மகிமைக்காக என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்;

உமது நியாயத்தினிமித்தம் வேதனையிலிருந்து என்னை விடுவியும்.

12 உமது உடன்படிக்கையின் அன்பினிமித்தம் என் பகைவரை அழித்துவிடும்;

என் எதிரிகள் அனைவரையும் ஒழித்துவிடும்;

ஏனெனில் நான் உமது அடியவன்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-19_11-20-24-