Publicidade

Salmos 86

தாவீதின் மன்றாட்டு.

1 யெகோவாவே, எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும்,

ஏனெனில், நான் ஏழையும் எளியவனுமாய் இருக்கிறேன்.

2 நான் உமக்கு உண்மையாயிருப்பதால் என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்;

உம்மில் நம்பிக்கை வைத்திருக்கும் உமது அடியேனைக் காப்பாற்றும்.

நீரே என் இறைவன்; 3 என்மேல் இரக்கமாய் இரும், யெகோவாவே,

நான் நாளெல்லாம் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.

4 யெகோவாவே உமது அடியேனுக்கு மகிழ்ச்சியைத் தாரும்;

ஏனெனில் நான் என் நம்பிக்கையை உம்மேல் வைக்கிறேன்.

5 யெகோவாவே, நீர் மன்னிக்கிறவரும் நல்லவருமாய் இருக்கிறீர்;

உம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும் அன்பு மிகுந்தவராயும் இருக்கிறீர்.

6 யெகோவாவே என் மன்றாட்டுக்குச் செவிகொடும்;

இரக்கத்திற்கான என் கதறுதலைக் கேளும்.

7 என் துன்ப நாளிலே, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்;

ஏனெனில் நீர் எனக்குப் பதில் கொடுப்பீர்.

8 யெகோவாவே, தெய்வங்களில் உம்மைப் போன்றவர் ஒருவரும் இல்லை;

உமது செயல்களை யாராலும் செய்யமுடியாது.

9 யெகோவாவே, நீர் உண்டாக்கிய எல்லா நாட்டு மக்களும்

உமக்கு முன்பாக வந்து வழிபடுவார்கள்;

அவர்கள் உமது பெயருக்கு மகிமையைக் கொண்டுவருவார்கள்.

10 நீர் பெரியவராய் இருக்கிறீர், மகத்துவமான செயல்களைச் செய்கிறீர்;

நீர் ஒருவரே இறைவன்.

11 யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும்;

அதினால் நான் உமது உண்மையைச் சார்ந்திருப்பேன்;

நான் உமது பெயரில் பயந்து நடக்கும்படி

ஒரே சிந்தையுள்ள இருதயத்தை எனக்குத் தாரும்.

12 என் இறைவனாகிய யெகோவாவே, நான் என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்;

உமது பெயரை என்றென்றும் மகிமைப்படுத்துவேன்.

13 நீர் என்மீது கொண்டிருக்கும் அன்பு பெரியது;

நீர் என்னை ஆழங்களிலிருந்தும்

பாதாளத்திலிருந்தும் விடுவித்தீர்.

14 இறைவனே, அகங்காரிகள் என்னைத் தாக்குகிறார்கள்;

கொடூரமான கூட்டத்தார் என்னைக் கொல்ல முயற்சிக்கின்றனர்,

அவர்கள் உம்மை மதிக்காதவர்கள்.

15 ஆனாலும் யெகோவாவே, நீரோ கருணையும் கிருபையுமுள்ள இறைவனாய் இருக்கிறீர்;

கோபப்படுவதில் தாமதிப்பவராயும், அன்பும் உண்மையும் நிறைந்தவராயும் இருக்கிறீர்.

16 என் பக்கமாய்த் திரும்பி என்மேல் இரக்கமாயிரும்;

உமது அடியேனுக்கு உமது பெலத்தைக் காண்பியும்;

என்னைக் காப்பாற்றும்,

ஏனெனில் என் தாயைப்போலவே நானும் உமக்கு சேவை செய்கிறேன்.

17 என் பகைவர் கண்டு வெட்கப்படும்படியாக,

உமது நன்மைக்கான ஓர் அடையாளத்தை எனக்குத் தாரும்;

ஏனெனில் யெகோவாவே, நீர் எனக்கு உதவிசெய்து, என்னைத் தேற்றியிருக்கிறீர்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-