Publicidade

Salmos 26

தாவீதின் சங்கீதம்.

1 யெகோவாவே, என்னை நியாயப்படுத்திக் காட்டும்,

ஏனெனில் நான் உத்தமமாய் நடக்கிறேன்;

நான் யெகோவாவை நம்பியிருக்கிறேன்,

நான் தடுமாறுவதில்லை.

2 யெகோவாவே, என்னைச் சோதியும், என்னைப் பரிசோதித்துப் பாரும்,

என் இருதயத்தையும் என் மனதையும் ஆராய்ந்து பாரும்;

3 ஏனெனில் உமது உடன்படிக்கையின் அன்பு

எப்பொழுதும் என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது;

நான் உமது சத்தியத்தின்படியே வாழ்கிறேன்.

4 ஏமாற்றுகிறவர்களோடு நான் உட்காருவதில்லை,

வஞ்சகரிடத்தில் நான் சேருகிறதுமில்லை;

5 தீமை செய்கிறவர்களின் கூட்டத்தை நான் அருவருக்கிறேன்,

கொடியவர்களுடன் உட்காரவும் மறுக்கிறேன்.

6 யெகோவாவே, நான் குற்றமில்லாமை விளங்கும்படி என் கைகளைக் கழுவி,

உமது துதியைப் பிரசித்தப்படுத்தி,

7 உமது அதிசயமான செயல்களையெல்லாம் விவரித்துக்கொண்டு,

உமது பீடத்தைச் சுற்றிவருகிறேன்.

8 யெகோவாவே, உமது மகிமை குடியிருக்கும் இடமாகிய,

நீர் வாழும் ஆலயத்தை நான் நேசிக்கிறேன்.

9 பாவிகளோடு என் ஆத்துமாவையும்,

இரத்தப் பிரியரோடு என் உயிரையும் எடுத்துக் கொள்ளாதேயும்.

10 அவர்களுடைய கைகளில் கொடுமையான சதித்திட்டங்களிருக்கின்றன;

அவர்களின் வலதுகைகள் இலஞ்சங்களால் நிறைந்திருக்கின்றன.

11 ஆனால் நான் என் உத்தமத்திலே வாழ்வேன்;

என்னை மீட்டெடுத்து என்மீது இரக்கமாயிரும்.

12 என் பாதங்கள் நேர்மையான இடத்தில் நிற்கின்றன;

நான் யெகோவாவை மகா சபையில் துதிப்பேன்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-