Publicidade

Salmos 108

தாவீதின் சங்கீதமாகிய பாடல்.

1 இறைவனே, என் இருதயம் உறுதியாயிருக்கிறது;

நான் என் முழு ஆத்துமாவோடும் இசையமைத்துப் பாடுவேன்.

2 யாழே, வீணையே, விழித்தெழுங்கள்,

நான் அதிகாலையை விழித்தெழச் செய்வேன்.

3 யெகோவாவே, நாடுகள் மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்;

மக்கள் மத்தியில் நான் உம்மைப் பாடுவேன்.

4 ஏனெனில் உமது உடன்படிக்கையின் அன்பு பெரியது,

அது வானங்களைப் பார்க்கிலும் உயர்ந்தது;

உமது சத்தியம் ஆகாயங்களை எட்டுகிறது.

5 இறைவனே, வானங்களுக்கு மேலாக புகழ்ந்து உயர்த்தப்படுவீராக;

உமது மகிமை பூமியெங்கும் இருக்கட்டும்.

6 நீர் நேசிப்பவர்கள் மீட்கப்படும்படி, நீர் எங்களைக் காப்பாற்றி,

உமது வலதுகரத்தின் வல்லமையினால் எங்களுக்கு உதவிசெய்யும்.

7 இறைவன் தமது பரிசுத்த இடத்திலிருந்து பேசியது:

"நான் வெற்றிகொண்டு சீகேமைப் பிரித்தெடுப்பேன்;

சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொடுப்பேன்.

8 கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது;

எப்பிராயீம் என் தலைக்கவசம்,

யூதா என் செங்கோல்.

9 மோவாப் என் கழுவும் பாத்திரம்,

நான் ஏதோமின்மீது என் காலணியை எறிவேன்;

நான் பெலிஸ்தியாவை வென்று முழக்கமிடுவேன்."

10 அரண்சூழ்ந்த நகரத்திற்கு யார் என்னைக் கொண்டுவருவார்?

யார் என்னை ஏதோமுக்கு வழிநடத்துவார்?

11 இறைவனே, எங்களைப் புறக்கணித்தவரும்,

எங்கள் படைகளுடன் போகாதிருந்தவரும் நீரல்லவா?

12 பகைவரை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்;

ஏனெனில் மனிதனின் உதவியோ பயனற்றது.

13 இறைவனாலேயே நாம் வெற்றிபெறுவோம்;

அவர் நமது பகைவரை மிதித்துப்போடுவார்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-