Publicidade

Salmos 91

1 மகா உன்னதமானவரின் அடைக்கலத்தில் வாழ்கிறவன்,

எல்லாம் வல்லவரின் நிழலில் இளைப்பாறுவான்.

2 நான் யெகோவாவைக் குறித்து, "அவரே என் புகலிடம், என் கோட்டை,

நான் நம்பியிருக்கிற என் இறைவன்" என்று சொல்வேன்.

3 நிச்சயமாகவே அவர் உன்னை

வேடனுடைய கண்ணியிலிருந்தும்,

கொன்றழிக்கும் கொள்ளைநோயிலிருந்தும் தப்புவிப்பார்.

4 யெகோவா தமது சிறகுகளால் உன்னை மூடுவார்;

அவருடைய சிறகுகளின் கீழே நீ புகலிடம் காண்பாய்;

அவருடைய சத்தியம் உனது கேடயமும் கவசமுமாயிருக்கும்.

5 நீ இரவின் பயங்கரத்திற்கும்,

பகலில் பறக்கும் அம்புக்கும் பயப்படாதிருப்பாய்.

6 இருளில் பின்தொடரும் கொள்ளைநோய்க்கும்,

நடுப்பகலில் பாழாக்கும் கொடிய வாதைக்கும் நீ பயப்படாதிருப்பாய்.

7 உன் பக்கத்தில் ஆயிரம்பேரும்,

உன் வலதுபக்கத்தில் பத்தாயிரம்பேரும் வீழ்ந்தாலும்,

அது உன்னை நெருங்காது.

8 உன் கண்களால் மட்டுமே நீ அதைப் பார்த்து,

கொடியவர்களுக்கு வரும் தண்டனையைக் காண்பாய்.

9 "யெகோவா எனக்குப் புகலிடம்" என்று நீ சொல்வாயானால்,

மகா உன்னதமானவரை உனது வாழ்விடமாகக் கொள்வாயானால்,

10 அப்பொழுது ஒரு தீங்கும் உன்மேல் வராது;

கொள்ளைநோய் உன் கூடாரத்தை நெருங்காது.

11 அவர் உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி,

உன்னைக்குறித்து தமது தூதர்களுக்குக் கட்டளையிடுவார்;

12 உன் பாதம் கல்லில் மோதாதபடி,

அவர்கள் உன்னைத் தங்கள் கரங்களில் தாங்கிக்கொள்வார்கள்.

13 நீ சிங்கத்தின்மேலும் விரியன்பாம்பின்மேலும் நடப்பாய்;

இளஞ்சிங்கத்தையும் பாம்பையும் மிதிப்பாய்.

14 யெகோவா இப்படியாக சொல்கிறார்:

"அவன் என்னை நேசிக்கிறபடியால், நான் அவனை விடுவிப்பேன்;

அவன் என் பெயரை அறிந்திருக்கிறபடியால், நான் அவனைப் பாதுகாப்பேன்.

15 அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்குப் பதில் கொடுப்பேன்;

துன்பத்தில் நான் அவனோடிருந்து,

அவனை விடுவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.

16 நீண்ட ஆயுளால் நான் அவனைத் திருப்தியாக்கி,

என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்."

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-