Publicidade

Salmos 50

ஆசாபின் சங்கீதம்.

1 வல்லமையுள்ள இறைவனாகிய யெகோவா பேசுகிறார்,

அவர் சூரியன் உதிக்கும் இடத்திலிருந்து,

அது மறையும் இடம் வரையுமுள்ள முழு உலகத்தையும் அழைக்கிறார்.

2 பூரண அழகுள்ள சீயோனிலிருந்து

இறைவன் பிரகாசிக்கிறார்.

3 நம்முடைய இறைவன் வருகிறார்,

அவர் மவுனமாய் இருக்கமாட்டார்;

அவருக்கு முன்னாக நெருப்பு சுட்டெரித்துச் செல்கிறது;

அவரைச் சுற்றிப் புயல் சீற்றத்துடன் வீசுகிறது.

4 அவர் தமது மக்களை நியாயந்தீர்க்கும்படியாக,

மேலேயுள்ள வானங்களையும் பூமியையும் அழைத்துச் சொல்கிறார்:

5 "பலியினால் என்னுடன் உடன்படிக்கை செய்த,

பரிசுத்தவான்களை ஒன்றுகூட்டுங்கள்."

6 வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கின்றன;

அவர் நியாதிபதியாகிய இறைவன்.

7 "என் மக்களே, கேளுங்கள், நான் பேசுவேன்;

இஸ்ரயேலே, நான் உனக்கு விரோதமாகச் சாட்சி கூறுவேன்:

நான் இறைவன், நானே உங்கள் இறைவன்.

8 எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கும் உங்கள் பலிகளுக்காகவோ,

அல்லது உங்கள் தகன காணிக்கைகளுக்காகவோ நான் உங்களைக் கண்டிக்கவில்லை.

9 உங்கள் வீட்டிலிலுள்ள காளைகளோ,

உங்கள் தொழுவத்திலுள்ள வெள்ளாடுகளோ எனக்கு வேண்டியதில்லை.

10 ஏனெனில் காட்டிலுள்ள எல்லா மிருகங்களும்

ஆயிரக்கணக்கான குன்றுகளிலுள்ள ஆடுமாடுகளும் என்னுடையவைகள்.

11 மலைகளிலுள்ள ஒவ்வொரு பறவையையும் நான் அறிவேன்;

வயல்வெளிகளிலுள்ள உயிரினங்களும் என்னுடையவைகள்.

12 நான் பசியாயிருந்தால் உங்களிடம் சொல்லமாட்டேன்;

ஏனெனில் உலகமும் அதிலுள்ள யாவும் என்னுடையவைகள்.

13 நான் காளைகளின் இறைச்சியை உண்டு,

ஆட்டுக்கடாக்களின் இரத்தத்தைக் குடிப்பேனோ?

14 "நீங்கள் இறைவனாகிய எனக்கு உங்கள் நன்றிக் காணிக்கைகளைப் பலியிடுங்கள்;

மகா உன்னதமான இறைவனாகிய எனக்கு உங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுங்கள்.

15 துன்ப நாளில் என்னை நோக்கி மன்றாடிக் கூப்பிடுங்கள்,

நான் உங்களை விடுவிப்பேன்; நீங்கள் என்னை மகிமைப்படுத்துவீர்கள்."

16 கொடியவர்களுக்கு இறைவன் சொல்கிறதாவது:

"என் சட்டங்களைக் கூறுவதற்கும்,

என் உடன்படிக்கையை உங்கள் உதடுகளினால் உச்சரிப்பதற்கும்

உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?

17 என்னுடைய அறிவுறுத்தலை வெறுத்து,

என் வார்த்தைகளை உங்களுக்குப் பின்னாக எறிந்துவிடுகிறீர்கள்.

18 நீங்கள் திருடனைக் காணும்போது அவனோடு சேர்ந்துகொள்கிறீர்கள்;

விபசாரக்காரருடனும் நீங்கள் பங்குகொள்கிறீர்கள்.

19 நீங்கள் உங்கள் வாயைத் தீமைக்காக பயன்படுத்துகிறீர்கள்;

உங்கள் நாவை வஞ்சகத்தைப் பேசப் பயன்படுத்துகிறீர்கள்.

20 நீங்கள் உங்கள் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசுகிறீர்கள்;

இடைவிடாமல் உங்கள் சகோதரனையே தூற்றுகிறீர்கள்.

21 இவற்றை நீங்கள் செய்தபோது நான் மவுனமாய் இருந்தேன்;

நானும் உங்களைப்போலவே இருப்பேன் என்று நினைத்தீர்கள்.

ஆனால் நான் உங்களைக் கடிந்துகொண்டு,

உங்கள் கண்களுக்கு முன்பாகவே உங்களைக் குற்றஞ்சாட்டுவேன்.

22 "இறைவனை மறக்கிறவர்களே, இதைக் கவனியுங்கள்;

இல்லாவிட்டால் நான் உங்களை முற்றிலும் தண்டித்துப் போடுவேன்;

ஒருவரும் உங்களைத் தப்புவிக்கமாட்டார்கள்.

23 நன்றி பலியைச் செலுத்துகிறவன் என்னைக் கனம்பண்ணுகிறான்;

இறைவனாகிய என் இரட்சிப்பை நான் குற்றமற்றவனுக்குக் காண்பிப்பேன்."

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-19_11-20-24-