Publicidade

Salmos 7

பென்யமீனியனான கூஷின் வார்த்தையின் நிமித்தம் தாவீது யெகோவாவுக்கு பாடிய சிகாயோன் என்னும் சங்கீதம்.

1 என் இறைவனாகிய யெகோவாவே, நான் உம்மிடத்தில் தஞ்சமடைகிறேன்;

என்னைத் துரத்துகின்ற அனைவரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றி விடுவியும்.

2 இல்லாவிட்டால், அவர்கள் சிங்கத்தைப்போல் என்னைக் கிழித்து,

என்னைத் தப்புவிக்க ஒருவருமின்றித் துண்டு துண்டாக்கிப் போடுவார்கள்.

3 என் இறைவனாகிய யெகோவாவே, அவர்கள் கூறுகிறதை நான் செய்திருந்து

என் கைகள் குற்றமுடையதாய் இருந்தால்,

4 என்னுடன் சமாதானமாய் இருக்கிறவனுக்கு நான் தீமை செய்திருந்தால்,

அல்லது காரணமின்றி என் பகைவனைக் கொள்ளையிட்டிருந்தால்,

5 அப்பொழுது என் எதிரி என்னைப் பின்தொடர்ந்து என்னைப் பிடிக்கட்டும்;

அவன் என்னைத் தரையில் தள்ளி,

உயிர்போக மிதித்து தூசியிலே என்னைக் கிடக்கப்பண்ணட்டும்.

6 யெகோவாவே, உம்முடைய கோபத்தில் எழும்பும்;

என் எதிரிகளினுடைய கடுங்கோபத்திற்கு விரோதமாக எழுந்திடும்.

என் இறைவனே, விழித்தெழும்; நீதியைக் கட்டளையிடும்.

7 எல்லா நாட்டினரும் உம்மைச் சூழ ஒன்றுசேர்த்து

நீர் உன்னதத்திலிருந்து அவர்களை ஆளுகை செய்யும்.

8 யெகோவா மக்களை நியாயந்தீர்க்கட்டும்.

யெகோவாவே, என்னுடைய நீதிக்குத் தக்கதாய் என்னை நியாயந்தீரும்;

மகா உன்னதமானவரே, என் உத்தமத்திற்கு ஏற்ப எனக்கு நியாயம் செய்யும்.

9 சிந்தனைகளையும் இருதயங்களையும் ஆராய்ந்தறிகிற

நீதியுள்ள இறைவனே,

கொடியவர்களின் வன்செயலை ஒரு முடிவுக்குக் கொண்டுவாரும்;

நீதியுள்ளவர்களைப் பாதுகாப்பாய் இருக்கச் செய்யும்.

10 மகா உன்னதமான இறைவனே என் கேடயம்;

இருதயத்தில் நேர்மையுள்ளவர்களை விடுவிக்கிறார்.

11 இறைவன் நீதியுள்ள நீதிபதி;

அவர் நாள்தோறும் தமது கடுங்கோபத்தை வெளிப்படுத்தும் இறைவன்.

12 கொடியவன் மனம் மாறாவிட்டால்,

இறைவன் தமது வாளைக் கூராக்குவார்;

அவர் தமது வில்லை வளைத்து நாணேற்றுவார்.

13 அவர் தமது பயங்கர ஆயுதங்களை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்;

எரிகிற அம்புகளையும் ஆயத்தமாக்குகிறார்.

14 தீமையினால் நிறைந்தவர்களோ

பிரச்சனையைக் கர்ப்பந்தரித்து, வஞ்சகத்தைப் பெற்றெடுக்கிறார்கள்.

15 மற்றவர்கள் விழும்படி குழியைத் தோண்டுகிறவர்களோ,

தாங்களே அதற்குள் விழுகிறார்கள்.

16 அவர்கள் செய்யும் தீங்கு அவர்கள் மேலேயே திரும்புகிறது;

அவர்கள் வன்செயல் அவர்கள் தலைமீதே விழுகிறது.

17 யெகோவாவினுடைய நீதியினிமித்தம் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்;

மகா உன்னதமான யெகோவாவின் பெயரைப் புகழ்ந்து பாடுவேன்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_10-32-54-